Published : 01 Feb 2023 07:51 AM
Last Updated : 01 Feb 2023 07:51 AM
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக் ஜலசந்தி’ கடலில் கச்சத்தீவு அமைந்துள்ளது.
இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜோசப் தாஸ் ஜெபரத்தினம், ராமேசுவரம் பங்குத் தந்தை தேவசகாயத்துக்கு அனுப்பி உள்ளார்.
இதுகுறித்து பங்குத் தந்தை தேவசகாயம் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா மார்ச் 3-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மார்ச் 4-ம் தேதி (சனிக்கிழமை) காலை சிறப்பு பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெறும். பின்னர் கொடி இறக்கத்துடன் திருவிழா நிறைவடையும்.
கச்சத்தீவு செல்ல விரும்புபவர்கள் ராமேசுவரம் வேர்க்கோட்டில் உள்ள ஆலயத் திருப்பயண அலுவலகத்தில் பிப்.2, 3 ஆகிய தேதிகளில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். மார்ச் 3-ல் ராமேசுவரத்தில் இருந்து படகுகள் புறப்படும். 5 முதல் 70 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பத்துடன் 3 பாஸ்போர்ட் புகைப்படங்கள், ஆதார் அட்டை நகல், வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் தங்கள் ஊர்க்காவல் நிலையங்களில் தடையில்லாச் சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் திருவிழாவில் கலந்து கொள்ள தங்கள் அலுவலகத்தில் தடையில்லாச் சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை கொடுக்க கடைசி நாள் பிப்ரவரி 10-ம் தேதி. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT