Published : 01 Feb 2023 07:45 AM
Last Updated : 01 Feb 2023 07:45 AM

கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் இருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விடுதலை: தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி: கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற கொலை முயற்சி உள்ளிட்ட 3 வழக்குகளில் இருந்து தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை விடுதலை செய்து தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியை சேர்ந்தவர் கா.மு.சுரேஷ். இவர் ஆறுமுகநேரி நகர திமுக செயலாளராக இருந்தார். 2011 மார்ச் 1-ம் தேதி காலை 11.15 மணியளவில் ஆறுமுகநேரியில் இவரை, சிலர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றனர். இதுதொடர்பாக ஆறுமுகநேரி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது திருச்செந்தூர் எம்எல்ஏவாக இருந்த அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தூண்டுதலின் பேரில்தான் அவர்கள் தன்னைக் கொலை செய்ய முயன்றதாக சுரேஷ் வாக்குமூலம் அளித்தார். அதன் அடிப்படையில், இந்த வழக்கில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் 7-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சசி என்ற சசிகுமார், மணிகண்டன், ஆல்நாத் ஆகிய மூவரும் வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பே இறந்துவிட்டனர். பாலகிருஷ்ணன், கோபி, உதயகுமார், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகிய 4 பேர் மீது தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இதேபோல் 21.05.2011 அன்று இரவு 10.15 மணியளவில் கா.மு.சுரேஷின் கட்சி அலுவலகத்தை பெட்ரோல் குண்டு வீசி எரித்து சேதப்படுத்தியதாகவும், அதேநாள் இரவு 11.30 மணியளவில் சுரேஷுக்கு சொந்தமான பாரில் வெடிகுண்டு வீசியதாகவும் கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், கோபி, உதயகுமார், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் தனித்தனியாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த 2 வழக்குகளும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த 3 வழக்குகளிலுமே அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்தில் கிடையாது. சதி செய்ததாகவே அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. 3 வழக்குகளிலும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரது மீதான குற்றச்சாட்டுகளும் நிருபிக்கப்படவில்லை எனக் கூறி அனைவரையும் விடுதலை செய்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஆர்.குருமூர்த்தி உத்தரவிட்டார்.

அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தற்போது தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகவும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார்.

இதேபோல் 2 வழக்குகளில் முதல் எதிரியாக சேர்க்கப்பட்ட கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை எதிர்த்து அதிமுக சார்பில் போட்டியிட்டவர். அவர் தற்போது அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x