நாம் தமிழர் கட்சியில் இணைவது பற்றி திருமகன் ஈவெரா ஒருபோதும் பேசியிருக்கமாட்டார்: சீமானுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்
சென்னை: நாம் தமிழர் கட்சியில் இணைவது பற்றி திருமகன் ஈவெரா ஒருபோதும் பேசியிருக்கமாட்டார் என மறைந்த திருமகன் ஈவெரா குறித்த சீமானின் பேச்சுக்கு சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப் பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த 29-ம் தேதி, ஈரோட்டில் நடைபெற்ற நாம் தமிழர் வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "இந்தத் தொகுதியின் எம்எல்ஏ திருமகன் ஈவெரா, முதலில் நாம் தமிழர் கட்சியில் சேருவதற்காகத்தான் வந்தார்" என பேசியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை நேற்று விடுத்த அறிக்கை: கடந்த 15 மாதங்களுக்கு மேலாக ஈரோடு கிழக்கு எம்எல்ஏ.வாக இருந்து மக்களுக்கு சேவையாற்றி மறைந்தவர் திருமகன் ஈவெரா. அவர் என்னுடைய நட்பு வட்டாரங்களில் மிகவும் முக்கியமானவர், என்னுடைய உற்ற நண்பர் என்பது தமிழக காங்கிரஸ் கட்சியினர் அனைவருக்கும் நன்கு தெரியும்.
அவர் என்னிடம் அனைத்து விஷயங்களையும் பரிமாறிக் கொள்வார். ஆனால், ஒருபோதும் சீமானை பற்றியோ, அவரது கட்சியை பற்றியோ என்னிடம் கூறியதில்லை. ஒரு காலத்தில் பெரியாரிய கொள்கையில், சிந்தனையிலிருந்த போது சீமானை திருமகன் ஈவெரா சந்தித்து இருக்கலாம்.
நட்பு ரீதியாக பழகியிருக்கலாம். ஆனால், அவரது கட்சியில் இணைவது பற்றி கண்டிப்பாக ஒருபோதும் பேசியிருக்கமாட்டார். மேலும், திருமகன் ஈவெரா தன்னுடைய தொகுதி மக்களுக்கு செய்ய வேண்டிய பணிகள் எதுவும் செய்யவில்லை என்று போகிற போக்கில் அபாண்டமாக பழி சுமத்தியிருக்கிறார் சீமான்.
ஈரோடு கிழக்கு தொகுதி மக்களிடம் திருமகன் ஈவெராவை பற்றி கேட்டால் அவரின் உயர்வான தன்மை குறித்து சீமானால் விளங்கிக் கொள்ள முடியும். எப்போதும் இறந்து போனவர்கள் பற்றியும், அவர்கள் திரும்பி வரமாட்டார்கள் என்பதால் இதுபோன்ற கருத்துகளை கூறிவருவதே சீமானின் வாடிக்கையாகிவிட்டது.
இதற்கு பின்பு மறைந்தவர்கள் குறித்து உண்மைக்கு புறம்பாக அவர்கள் சொல்லாத செய்திகளை சீமான் பேசாமல் இருக்க வேண்டும். ஊடக வெளிச்சத்துக்காகவும், தன்னை முன்னிலைப்படுத்துவதற்காகவும், இது போன்ற கருத்துகளை கூறி வரும் சீமானுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
