Published : 01 Feb 2023 04:07 AM
Last Updated : 01 Feb 2023 04:07 AM
தருமபுரி: காப்பீட்டு திட்டத்தின் கீழ் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொண்ட தருமபுரி மாவட்ட குழந்தைகள் இருவருக்கு மாவட்ட ஆட்சியர் நேற்று உபகரணங்கள் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் தீர்த்தமலை பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலில் ஈடுபடும் தம்பதிக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தை கண் திறக்க முடியாத நிலையில் இருந்தது. பரிசோதனையில், பிறவி கண்புரை இருப்பது தெரிய வந்தது. அறுவை சிகிச்சை செய்து பார்வையை மீட்க முடியும் என நம்பிக்கையளித்த மருத்துவர்கள் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இரு வார இடைவெளியில் குழந்தையின் இருகண்களிலும் புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அந்த குழந்தைக்கு பார்வை முழுமையாக திரும்பியுள்ளது. அதேபோல, கோட்டப்பட்டி அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு வலது கண்ணில் இளம் வயது முதலே புரை இருப்பது தெரிய வந்தது. அந்த சிறுமிக்கும் அறுவை செய்து கண் பார்வை சரி செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட இரு குழந்தைகளையும் மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று நேரில் சந்தித்தார். அப்போது சிகிச்சை அனுபவங்கள், சிகிச்சையின் பயன்கள் உள்ளிட்டவை குறித்து ஆட்சியர் கேட்டறிந்தார். குழந்தைகளுக்கு கண் கண்ணாடி, மருத்துவ பெட்டகம், மரக்கன்றுகள் ஆகியவற்றையும் வழங்கினார்.
இவ்விரு குழந்தைகளின் கண் பார்வை குறைபாடுகளை சரிசெய்ய காரணமாக இருந்த அரசு மருத்துவர்கள் குழுவினருக்கு ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். பின்னர் ஆட்சியர் கூறும்போது, தேசிய குழந்தைகள் நல வாழ்வு திட்டத்தின் மூலம், பச்சிளங் குழந்தைகள் முதல் 18 வயது வரை உள்ள சிறுவர் சிறுமியரின் பிறவி குறைபாடுகள், பிற குறைபாடுகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் இதுவரை 412 பிறவி இருதய குறைபாடு அறுவை சிகிச்சை, 27 பிறவி வளைபாதம் அறுவை சிகிச்சை, 103 உதடு மற்றும் அன்னப்பிளவு அறுவை சிகிச்சை, 18 பிறவி கண்புரை நீக்க அறுவை சிகிச்சை, 66 பிறவி காது கேளாமை அறுவை சிகிச்சை போன்ற அறுவை சிகிச்கைள் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது.
எனவே, அரசின் நலத்திட்டங்களை தருமபுரி மாவட்ட மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) சவுண்டம்மாள், கண் மருத்துவ உதவியாளர் கலையரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT