Published : 01 Feb 2023 06:12 AM
Last Updated : 01 Feb 2023 06:12 AM
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்தில் சரிபாதி பங்கு கேட்டு அவருடையஅண்ணன் எனக்கூறி பெங்களூருவைச் சேர்ந்த முதியவர் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தீபா மற்றும் தீபக் ஆகியோர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மைசூரைச் சேர்ந்த என்.ஜி.வாசுதேவன்(83) என்ற முதியவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது தந்தை ஆர்.ஜெயராம். என்னுடைய தாயார் ஜெ.ஜெயம்மா. இவர்களுக்கு நான் மட்டுமே வாரிசு. எனது தந்தை வேதவல்லி என்ற வேதம்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜெயக்குமார், ஜெயலலிதா ஆகியோர் பிறந்தனர். அந்த வகையில் ஜெயக்குமாரும், ஜெயலலிதாவும் என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் மற்றும் சகோதரி.
ஜீவனாம்ச வழக்கு: கடந்த 1950-ல் எனது தந்தையிடம் ஜீவனாம்சம் கோரி மைசூர் நீதிமன்றத்தில் எனது தாயார் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில்வேதவல்லி மற்றும் அவருடையவாரிசுதாரர்களான ஜெயக்குமார்மற்றும் ஜெயலலிதா ஆகியோரையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்துள்ளார். ஆனால் அந்த வழக்கு சமரசம் செய்யப்பட்டது.
ஜெயலலிதாவின் மறைவுக்கு முன்பாகவே ஜெயக்குமார் இறந்துவிட்டார். தற்போது ஜெயலலிதாவின் சகோதரர் என்ற முறையில் நான் மட்டுமே நேரடி வாரிசாக உள்ளேன்.
எனவே ஜெயலலிதாவின் சொத்துகளில் சட்டப்படி எனக்கு சரிபாதி வழங்க வேண்டும். தீபாமற்றும் தீபக் ஆகியோர் மட்டுமேஜெயலலிதாவின் வாரிசுகள் என உயர் நீதிமன்றம் கடந்த 2020-ல் பிறப்பித்த தீர்ப்பை மாற்றியமைத்து சொத்தில் எனக்கும் சரிபாதி வழங்க உத்தரவிட வேண்டும்.
கரோனாவால் தாமதம்: இந்த மனுவை கடந்த 2021-ம்ஆண்டே உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தேன். அப்போது மனுவில் சில பிழைகள் இருப்பதாகக்கூறி திருப்பி அனுப்பப்பட்டது. அதன்பிறகு கரோனா ஊரடங்கு காலகட்டமாக இருந்ததால் உடனடியாக மனு தாக்கல் செய்ய முடியவில்லை.
தற்போது காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தமனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கை பட்டியலிடுவதற்காக உயர் நீதிமன்றத்தில் சாட்சிய மற்றும் ஆவண, ஆதாரங்களை விசாரிப்பதற்காக உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது தொடர்பாக தீபா மற்றும் தீபக் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.20-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT