

மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் மற்றும் விருந்தினர்கள் இன்று வருகை தருகின்றனர். இதையொட்டி மாமல்லபுரம் நகரப் பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 800 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் இன்று மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட வருகின்றனர். இதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் நேற்று மாமல்லபுரம் நகரப்பகுதி முழுவதும் போலீஸாரில் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டது. பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட எஸ்பி பிரதீப் நேற்று கலைச்சின்ன வளாகங்களில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, ஏஎஸ்பி விவேகானந்தர் சுக்லா, டிஎஸ்பி ஜகதீஸ்வரன், ஆய்வாளர் ருக்மாங்கதன், சுற்றுலா அலுவலர் சக்திவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் மாவட்ட எஸ்பி பிரதீப் கூறியதாவது: வெளிநாட்டு பிரதிநிதிகள் பாதுகாப்பாக நகருக்குள் வந்து செல்லும் வகையில் நகரை சுற்றி 7 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு, அனைத்து வாகனங்களும் போலீஸாரின் சோதனைக்கு பிறகே நகருக்குள் அனுமதிக்கப்படுகின்றன. கலைச் சின்னங்களின் நுழைவு வாயில் பகுதிகளில் மெட்டல் டிடெக்டர் கருவிகள் மூலம் அனைவரும் சோதனை செய்யப்படுகின்றனர். மோப்ப நாய் மூலம் அனைத்து இடங்களிலும் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனால், நகரப்பகுதியில் வழக்கம்போல் கடைகள் இயங்கலாம். மேலும், பள்ளிகள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் வழக்கம்போல் செல்லலாம்.
வெளிநாட்டு பிரதிநிதிகள் நகருக்குள் வரும்போது, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஒருசில கட்டுப்பாடுகள் இருக்கும். பாதுகாப்பு பணியில் 800 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால், மாமல்லபுரம் நகரம் போலீஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.