

சென்னை: திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு அரசியல் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது வழங்கப்பட்டது. காயிதே மில்லத் கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல், பொது வாழ்வில் நேர்மைக்கான காயிதே மில்லத் விருது வழங்கும் விழா, சென்னை மேடவாக்கத்தில் உள்ள காயிதே மில்லத் ஆடவர் கல்லூரியில் நேற்று நடந்தது.
விழாவில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு அரசியல் நேர்மைக்கான விருதைகாயிதே மில்லத் கல்வி மற்றும்சமூக அறக்கட்டளை பொதுச்செயலாளர் எம்.ஜி.தாவூத் மியாகான் வழங்கினார். மூத்த பத்திரிகையாளர் மற்றும் ‘தி வயர்’ நிறுவன ஆசிரியர் சித்தார்த் வரதராஜனுக்கு பொது வாழ்வில் நேர்மைக்கான விருதை சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.சாதிக் வழங்கினார்.
விருதை பெற்றுக் கொண்ட கி.வீரமணி பேசியதாவது: கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் பெயரில் விருது பெறுவதை பெருமையாக கொள்கிறேன். பெரியாரின் மாணவர் என்ற தகுதியால் நீங்கள் என்னை அடையாளம் கண்டுள்ளீர்கள். இந்த பெருமை எல்லாம் பெரியாரை சேரும். சிறந்த மொழி, வளம் மிகுந்த மொழியை ஆட்சி மொழி ஆக்க வேண்டுமென்றால், தமிழ் மொழியை ஆட்சி மொழியாக ஆக்குங்கள் என்று அரசியல் சட்டம் உருவாவதற்கு முன்பே சொன்ன பெருமை காயிதே மில்லத்தையே சேரும் என்றார்.
இந்த விழாவில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி டி.ஹரிபரந்தாமன், மேற்கு வங்க மாநில முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர் கோ.பாலகிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஹர்ஷ் மந்தேர், காயிதே மில்லத் கல்லூரி இயக்குநர் அ.ரஃபி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.