போக்குவரத்து ஊழியர்களின் 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது: 50 சதவீத ஊதிய உயர்வு கேட்க தொழிற்சங்கங்கள் முடிவு

போக்குவரத்து ஊழியர்களின் 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நாளை நடக்கிறது: 50 சதவீத ஊதிய உயர்வு கேட்க தொழிற்சங்கங்கள் முடிவு
Updated on
1 min read

அரசு போக்குவரத்து ஊழியர்களின் 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை குரோம்பேட்டையில் நாளை (மே 24) நடக்கிறது. இதில், 50 சதவீதம் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேச தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி வரும் மொத்தம் 1.43 லட்சம் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. ஏற்கெனவே போடப்பட்ட 12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் முடிவடைந்துள்ளது.

புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கு முன்பு ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பலன்கள், தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி வழங்கக்கோரி தொழிற் சங்கங்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட் டன. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற் படாததால், ஊழியர்கள் திடீரென வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோரைக் கொண்ட குழுவுடன் தொழிற்சங்க நிர்வாகிகள் கடந்த 16-ம் தேதி நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகைக்காக ரூ.1000 கோடி, தற்போது பணியில் உள்ள ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.250 கோடி என மொத்தம் ரூ.1,250 கோடியை 3 மாதங்களில் வழங்க தமிழக அரசு ஒப்புக்கொண்டதால், வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நாளை (மே 24) நடக்கவுள்ளது. இதில், பங்கேற்க தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உட்பட 48 தொழிற்சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் ஜெ.லட்சுமணன் கூறும்போது, “13-வது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்கங்களுக்கு நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையின்போது, ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தங்களில் நிலுவையில் உள்ள கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும். புதிய ஊதிய ஒப்பந்தத்தில் 50 சதவீத ஊதிய உயர்வு வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்படும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in