Published : 01 Feb 2023 04:23 AM
Last Updated : 01 Feb 2023 04:23 AM

வேப்பூர் அருகே அனுமதியின்றி 55 பனை மரங்கள் வெட்டிய திமுக பிரமுகர்: நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் தயக்கம்

வேப்பூர் அருகே அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ள பனை மரங்கள்.

விருத்தாசலம்: வேப்பூர் அருகே உரிய அனுமதியின்றி 55 பனை மரங்கள் வெட்டிய திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுப்பதில் மாவட்ட நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது.

தமிழகத்தின் மாநில மரமான பனை மரங்களை பாதுகாக்கும் வகையில் கடந்த 2021-22-ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கை வாசித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பனை மரங்களை வெட்ட தடை விதித்து, மிக அவசியான தேவை எனில் ஆட்சியரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே பனை மரங்களை வெட்ட வேண்டும் என சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இதற்கு விவசாயிகள் மத் தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூரில் சேலம் சாலைப் பகுதியில் வளர்ந்திருந்த சுமார் 55 மரங்களை பொக்லைன் இயந்திரம் கொண்டு வெட்டிச் சாய்க்கப்பட்டதாக வேப்பூர் வட்டாட்சியர் மோகனுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர் அங்கு சென்றபோது அங்கிருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர். பின்னர் வட்டாட்சியர் மோகன் இதுபற்றி மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்தார். மரங்களை வெட்டியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பாலசுப்ரமணியம் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து வேப்பூர் காவல் நிலையத்தில் வட்டாட்சியர் புகார் அளித்தார். புகார் குறிப்பாணை பதிவு செய்த போலீஸார் வாகனங்களை மட்டும் பறிமுதல் செய்தனர். மரங்கள் வெட்டப்பட்டு 40 நாட்களை கடந்தும், இதுவரை வழக்கு பதிவு செய்யப்பட வில்லை. மரங்களை வெட்டிய நபர் சுதந்திரமாக காவல் நிலையம் வந்து செல்வதாகவும் இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது, “புகார் தொடர்பாக சிஎஸ்ஆர் எனும் குறிப்பாணை பதிவு செய்து, வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம். வருவாய் துறையினரின் வழிகாட்டுதலின்படி தான் நடவடிக்கை எடுக்க முடியும்” என்றார். இது பற்றி வருவாய்துறையில் விசாரித்தபோது, “மரம் வெட்டியது தொடர்பான அறிக்கையை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைத் துள்ளோம்.

அவர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அபராதம் விதிக் கப்படுமா அல்லது தண்டனையா என்பதை ஆட்சியர் தான் கூற வேண்டும்” என்றனர். பனை மரங்களை வெட்டிய நபர் செல்வாக்கான திமுக பிரமுகர் என்பதால் மாவட்ட நிர்வாகம் செய்வதறியாது கையை பிசைந்து நிற்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x