

முதுநிலை மருத்துவ பட்டமேற் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான வழக்கில் சிறப்பு அமர்வு நீதிபதிகள் தங்களுக்குள் மாறுபட்ட தீர்ப்பைக் கூறியதால் 3-வது நீதிபதியான எம்.சத்திய நாராயணன் நேற்று வழக்கு விசாரணையைத் தொடங்கினார்.
தமிழகத்தில் முதுநிலை மருத்துவ பட்டமேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகள்படி நடத்துவதா? அல்லது தமிழக அரசு வெளியிட்டுள்ள விளக்கக் குறிப்பேட்டின்படி நடத்துவதா? என்பதில் சட்ட சிக்கல் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக ஒரு வழக்கில் தீர்ப்பளித்த தனி நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தமிழகத்தில் மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சி்ல் விதிகளைப் பின்பற்றி நடத்தவும், அதன் அடிப் படையில் அரசுப்பணியில் உள்ள மருத்துவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கவும் கடந்த மாதம் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு தங்களுக்கு எதிராக உள்ளதாகக் கூறி அரசுப்பணியில் உள்ள மருத்துவ மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரு கின்றனர். இந்நிலையில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறை யீட்டு மனுக்களை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு அமர்வு நீதிபதிகளான கே.கே.சசிதரனும், எஸ்.எம். சுப்பிரமணியமும் மாறு பட்ட தீர்ப்பை வழங்கினர்.
இதனால் இந்த வழக்கு விசாரணை நேற்று 3-வது நீதிபதி யான எம்.சத்யநாராயணன் முன்பு நடந்தது. மேல்முறையீட்டு மனு தாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி நீண்டநேரம் விரிவாக வாதிட்டனர். இதுபோல தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பிலும் வாதிடப் பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை நாளையும் (இன்று) நடைபெறும் என தெரிவித்து நீதிபதி விசாரணையை தள்ளிவைத்தார்.