

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் இறந்து போன 5,000 பெயருடன் வாக்காளர் பட்டியல் உள்ளதாக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பணிகள் தொடர்பாக ஏற்கெனவே, ஈரோட்டில் மூன்று ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் பழனிசாமி, நேற்று மாலை நடந்த ஆலோசனைக் கூட்டத்திலும் பங்கேற்றார். இந்த கூட்டத்தில், கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி குறித்து, அவர் கேட்டறிந்தார்.
இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் தேர்தல் பணிகள் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் கேஏ செங்கோட்டையன் கூறியதாவது: உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்து, இரட்டை இலை சின்னம் கிடைக்கும். இதற்காக, பொதுக்குழு தீர்மானங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்பித்துள்ளோம்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த ஐந்து நாட்களாக வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இதில், இறந்துபோன 5,000 வாக்காளர்கள் பெயர் உள்ளதை கண்டறிந்துள்ளோம். மேலும், 20 ஆயிரம் முதல், 25 ஆயிரம் வாக்காளர்கள் குடி பெயர்ந்துள்ளனர். எனவே, தேர்தல் நடத்தும் அதிகாரிகள், பூத் சிலிப் வழங்கும் போது சரி செய்ய வேண்டும்.
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக தேர்தல் பணிமனை நாளை திறக்கப்படுகிறது. நாளை முதல் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொள்ளவுள்ளோம். இந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு கிடைக்கும் வெற்றி, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்கும்.
அதிமுக ஆட்சியில் இருந்த போது, திருமண உதவித்தொகை திட்டத்திற்காக, ஒரு ஆண்டில் ரூ.766 கோடியை ஒதுக்கீடு செய்தது. இந்த திட்டத்தை ரத்து செய்த திமுக அரசு, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு தலா ரூ.1,000 வழங்குவதற்காக ரூ.200 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்துள்ளது என்றார்.
இந்த ஆலோசனையில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம், முன்னாள் துணை மேயர் கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் 20 ஆயிரம் முதல், 25 ஆயிரம் வாக்காளர்கள் குடி பெயர்ந்துள்ளனர்.