

ஈரோடு: உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்பில் உள்ள நிலத்தை மீட்டு, 80 அடி திட்டச் சாலையை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஈரோடு கிழக்கு தொகுதியில் 108 பேரை வேட்பாளர்களாக களமிறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்க நிர்வாகிகள் கைலாசபதி, செந்தில், சிவராமன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, ஈரோட்டில் 80 அடி திட்டச் சாலையை உடனடியாக திறக்க வேண்டும்.
தமிழக அரசு உடனடியாக இந்த உத்தரவினை அமல்படுத்த வேண்டும். சிஎஸ்ஐ நிறுவனம் ஆக்கிரமித்துள்ள 12.66 ஏக்கர் நிலம், அரசு புறம்போக்கு நிலம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை கவனத்தில் கொண்டு, மேற்படி இடத்தை, காலதாமதமின்றி அரசு மீட்டெடுக்க வேண்டும்.
மேலும், 80 அடி திட்டச்சாலையை திறப்பது, 12.66 ஏக்கர் நிலத்தை மீட்டெடுப்பது ஆகிய கோரிக்கைகளை அரசுக்கு முறையிடும் விதமாக ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில், ஈரோடு மாநகர மக்கள் மேம்பாட்டு சங்கம் சார்பாக 108 பொதுமக்களை வேட்பாளர்களாக நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.