

புதிய மீன்பிடி விசைப்படகுகள் கட்டும் மீனவர்கள் 50 சதவீத மானியம் பெற மீன்துறை ஆணை யரிடம் ஜூன் 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
அண்மைக்கடல் பகுதியில் அதிகரித்து வரும் மீன்பிடி அழுத்தத்தை குறைத்திடவும் ஆழ்கடல் பகுதியில் செறிந்துள்ள மீன்வள ஆதாரங்களை முறையாக பயன்படுத்திடவும் தூண்டில் மற்றும் செவுள் வலை படகு சூரை மீன்பிடிப்பினை ஊக்கப்படுத்திடும் நோக்கில் மீனவர்களுக்கு புதிய மீன்பிடி விசைப்படகு கட்டும் திட்டத்தினை தமிழக அரசு அறி வித்து செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தூண் டில் மற்றும் செவுள் வலை பயன் படுத்தும் புதிய மீன்பிடி விசைப் படகினை கட்டிட படகு ஒன்றுக்கு ஆகும் செலவினத்தில் 50 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.30 லட்சம்) மீனவர்களுக்கு மானியமாக வழங்கப்படும்.
தமிழகத்தை சார்ந்த முழு நேர மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அதிகபட்சம் 6 பேர் கொண்ட குழுவாகவோ அல்லது மீனவர் கூட்டுறவு சங்கங்கள் அல்லது தனி நபராகவோ இத்திட்டத்தின்கீழ் பயன் பெறலாம்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் www.fisheries.tn.gov.in என்ற மீன்வளத்துறை இணைய தளத்திலிருந்து விண்ணப்பங்களை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சென்னை மீன்பிடித் துறைமுக மேலாண்மை பிரிவு, மீன் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
முழுமையாக பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மீன் துறை ஆணையர், நிர்வாக அலுவலக கட்டடங்கள், டி.எம்.எஸ் வளாகம், தேனாம்பேட்டை, சென்னை 600006 என்ற முகவரிக்கு பதிவு/விரைவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ ஜூன் 16-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் பெற 044-25986080 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.