Published : 01 Feb 2023 04:13 AM
Last Updated : 01 Feb 2023 04:13 AM

அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு கூட்ட செலவை மாநகராட்சி ஏற்பதா? - திமுக கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு

பிரதிநிதித்துவப் படம்

திருச்சி: திருச்சி கலையரங்கம் வளாகத்தில் 3.12.2022 அன்று நடைபெற்ற நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நடத்திய வளர்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வுக் கூட்டத்துக்கான பணிகளை செய்ய ரூ.38.98 லட்சம் செலவிடப்பட்டதற்கு ஒப்புதல் கோரிய தீர்மானம் நேற்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டது.

இந்த செலவு விவரம் குறித்து திமுக கவுன்சிலர் முஸ்தபா கமால் கேள்வி எழுப்பினார். அதற்கு, மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டதன்பேரில், கூட்டத்துக்கான அனைத்து செலவுகளையும் மாநகராட்சியே ஏற்றுக்கொண்டதாக மேயர் விளக்கமளித்தார்.

அப்போது குறுக்கிட்ட திமுக கவுன்சிலர் முத்துச்செல்வம்,‘‘இந்த செலவுகளை ஏன் மாநகராட்சி நிர்வாகம் ஏற்க வேண்டும். அதற்கெல்லாம் வேறு வழி இருக்கிறது. அதை செய்திருக்கலாமே?’’ என்றார். அப்போது மேயர் ‘‘அது என்ன வழி என கூறுங்கள்'’ என்றார். அதற்கு, ‘‘பிறகு சொல்கிறேன்’' என முத்துச்செல்வம் பதிலளித்தார்.

அதைத்தொடர்ந்து கவுன்சிலர் காஜாமலை விஜய், ‘‘அமைச்சர் கே.என்.நேரு நடத்திய நிகழ்ச்சியின் செலவை ஏற்பதற்கு இந்தளவுக்கு விவாதம் தேவையா'’ என்றார். அப்போது, ‘‘அமைச்சர் கூட்டத்துக்கான செலவு பற்றி தற்போது பேசவில்லை. கூட்டத்துக்கான செலவுத்தொகை குறித்து அமைச்சருக்கு தெரியுமா எனத் தெரியவில்லை'’ என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

அதற்கு பதிலளித்த மேயர், ‘‘இங்கு என்ன நடைபெறுகிறது என்ற ஒவ்வொரு விஷயமும் அமைச்சர் கே.என்.நேரு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை உடனுக்குடன் தெரிந்துவிடும். தவறு செய்தால் நிச்சயம் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்’' என்றார். தொடர்ந்து, திமுக கவுன்சிலர் முத்துச்செல்வம் பேசும்போது, “மாநகராட்சி டெண்டர் நடைமுறைகளில் வெளிப் படைத் தன்மை வேண்டும்.

டெண்டர் தொடர்பான பல விஷயங்கள் வெளியில் தெரிவதில்லை. கேட்டால் சரியான பதிலும் அளிப்பதில்லை” என்றார். அப்போது திமுக கவுன்சிலர்களான ராமதாஸ், காஜாமலை விஜய், லீலா உள்பட பல கவுன்சிலர்கள் எழுந்து தங்களது கருத்துகளைக் கூற முற்பட்டதால் நீண்ட நேரம் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து மேயர் பேசும்போது, “நாளிதழ்களில் விளம்பரம் செய்து, ஆன்லைன் மூலம் வெளிப்படையான டெண்டர்தான் மேற்கொள்ளப்படுகிறது. எனினும், இனி கவுன்சிலர்கள் அனைவருக்கும் தெரியும் வகையில் டெண்டர் நோட்டீஸ் வெளியிடப்படும்'’ என்றார்.

மேலும், மாடுகளால் மாநகரில் விபத்துகள் அதிகரிப்பதால், சாலையில் திரிந்து பிடிபடும் மாட்டுக்கு ரூ.5 ஆயிரம், கன்றுக்கு ரூ.2,500 வீதம் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என மேயர் தெரிவித்தார்.

இதற்கு திமுக உட்பட பல்வேறு கட்சிகளின் கவுன்சிலர்கள் அபராதத் தொகையை குறைக்க வேண்டும் எனக் கோரினர். ஆனால், மாற்றமின்றி, அதே அபராதத் தொகையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x