Published : 01 Feb 2023 04:15 AM
Last Updated : 01 Feb 2023 04:15 AM
தென்காசி: தென்காசியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்டத்தின் முதல் ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் நியமிக்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியராக சமீரன், அவருக்கு பின்னர் கோபால சுந்தரராஜ் அடுத்தடுத்து ஆட்சியராக நியமிக்கப்பட்டு, நான்காவது ஆட்சியராக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆகாஷ் நியமிக்கப்பட்டார். புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிந்து 4-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து சில மாதங்களே ஆகின்றன.
ஆனால் தென்காசி மாவட்டத்துக்கு 5-வது ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக பொறுப் பேற்ற ஆகாஷ், குற்றாலத்தில் 3 ஆண்டு களுக்கு பின்னர் சாரல் விழாவை சிறப்பாக நடத்தினார். அத்துடன், புத்தகத் திருவிழா, உணவுத் திருவிழாவையும் நடத்தி பொதுமக்களிடம் பாராட்டை பெற்றார்.
மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சிகளால் விவசாயம், இயற்கை வளம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் கூறியதைத் தொடர்ந்து, ஆய்வு குழு அமைத்து ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக வடகரை பகுதியில் உள்ள சில செயற்கை நீர்வீழ்ச்சிகளை அகற்றி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
தொடர்ந்து தனியாரால் அமைக்கப்பட்டுள்ள செயற்கை நீர்வீழ்ச்சிகளை கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார். சமீபத்தில் கிராம உதவியாளர்கள் தேர்வை நேர்மையான முறையில் நடத்தி, தகுதி வாய்ந்தவர்களுக்கு பணி நியமனம் கிடைக்க நடவடிக்கை எடுத்தார். அரசியல் தலையீடுகள் இல்லாமல், பணம் எதுவும் கொடுக்காமல் பணி நியமனம் கிடைக்கப்பெற்றவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பல்வேறு பகுதிகளில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, விவசாயத்துக்கு தண்ணீர் கிடைக்கச் செய்தார். மேலும், அரசு புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து அவற்றை வேலியிட்டு பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார். மாலை 3 மணி முதல் 5 மணி வரை பார்வையாளர்கள் தன்னை நேரில் சந்தித்து கோரிக்கைகளை தெரிவிக்கவும் வழிவகை செய்தார்.
ஆட்சியர் ஆகாஷின் பல்வேறு நடவடிக்கைகள் பலதரப்பட்ட மக்களிடமும் பாராட்டை பெற்ற நிலையில், அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் போராட்டம்: இந்த இடமாறுதல் உத்தரவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் ஏராளமானோர் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஊத்துமலையில் நேற்று விவசாயிகள் திரண்டு ஆட்சியர் இடமாறுதல் உத்தரவுக்கு எதிராக தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
ஆட்சியர் ஆகாஷ் இடமாறுதல் உத்தரவை அரசு ரத்து செய்து, மேலும் சில ஆண்டுகள் தென்காசி மாவட்ட ஆட்சியராக பணியாற்ற உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT