Published : 01 Feb 2023 04:00 AM
Last Updated : 01 Feb 2023 04:00 AM
வேலூர்: வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசின் திட்டங்கள் செயல்பாடுகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு செய்யவுள்ளார்.
இதற்காக, வேலூருக்கு ரயில் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருகைதரவுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்கும் சட்டம்- ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் இன்றிரவு நடைபெறவுள்ளது. அதேபோல், நான்கு மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கும் ஆய்வுக்கூட்டம் நாளை காலை நடைபெறவுள்ளது.
வேலூருக்கு முதல்வர் வருகையொட்டி கூடுதல் டிஜிபி வனிதா மேற்பார்வையில் வடக்கு மண்டல ஐஜி டாக்டர் கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி மற்றும் 4 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் என 3 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். முதல்வர் வருகையால் சட்டம் - ஒழுங்கு கூடுதல் டிஜிபி சங்கர், உளவுப்பிரிவு ஐஜி டாக்டர் செந்தில்வேலன், ரயில்வே ஐஜி டாக்டர் விஜயகுமார் உள்ளிட்டோர் வேலூரில் முகாமிட்டுள்ளனர்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தொடங்கி வேலூர்-காட்பாடி சாலை முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. வேலூர் மாநகரம் முழுவதும் 3 அடுக்கு பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கள ஆய்வில் முதலமைச்சர் ஆய்வு நடைபெறவுள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு்ள்ளனர்.
முதல்வரின் சுற்றுப் பயணம் காரணமாக, வேலூர் மற்றும் காட்பாடி பகுதியில் 2 நாட்கள் ட்ரோன்கள் பறக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
போக்குவரத்து மாற்றம்: வேலூர் - காட்பாடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க சித்தூரில் இருந்து வேலூர் வரும் கனரக வாகனங்கள் சேர்க்காடு, ஈ.பி கூட்டுச்சாலை வழியாக வேலூர் செல்ல வேண்டும்.
குடியாத்தத்தில் இருந்து வேலூர் வரும் கனரக வாகனங்கள் வடுகன்தாங்கல், விரிஞ்சிபுரம், சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து வேலூர் வரும் கனரக வாகனங்கள் சாத்துமதுரை, தங்கக்கோயில், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்ல வேண்டும்.
பள்ளிகளுக்கு விடுமுறை: முதல்வர் வருகையையொட்டி வேலூர்-காட்பாடி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க காட்பாடி பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT