6.32 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்: போலீஸ் வேலைக்கு 21-ல் எழுத்து தேர்வு

6.32 லட்சம் விண்ணப்பங்கள் விநியோகம்: போலீஸ் வேலைக்கு 21-ல் எழுத்து தேர்வு
Updated on
1 min read

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் 13,137 இரண்டாம் நிலை காவலர்கள், 1,015 இரண்டாம் நிலை சிறைக் காவலர்கள் மற்றும் 1,512 தீயணைப்போர் பதவிக்குரிய பொதுத் தேர்வுக்கான அறிக்கையை கடந்த ஜனவரி 23-ம் தேதி வெளியிட்டது.

இத்தேர்வுக்கு 6 லட்சத்து 32 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் 2012-ல் நடத்தப்பட்ட பொதுத் தேர்வுக்கு அதிக எண்ணிக்கையில் 2 லட்சத்து 71 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன.

இந்த தேர்வுக்காக முதல் முறையாக திருநங்கைகள் மூன்றாம் பாலின பிரிவில் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எழுத்து தேர்வு வரும் 21-ம் தேதி சென்னை உட்பட 32 மாவட்டங்களிலும் 410 தேர்வு மையங்களிலும் நடைபெற உள்ளது. எழுத்துத் தேர்வில் கலந்து கொள்வதற்குரிய தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை விண்ணப்பதாரர்கள் www.tnusrbonline.org இணைய தளத்தில் நேற்று (11-ம் தேதி) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழக காவல் துறையில் சுமார் 20 ஆயிரம் காலி பணியிடங்கள் உள்ளன. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது நடக்க உள்ள எழுத்து தேர்வுக்கு ஒன்றரை லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல் சுமார் 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகளும் தேர்வெழுத ஆர்வமாக உள்ளனர். திருநங்கைகளின் ஆர்வத்துக்கு சமீபத்தில் எஸ்.ஐ. தேர்வெழுதி வெற்றி பெற்ற பிரித்திகா யாஷினி என்ற திருநங்கை தூண்டுகோலாக இருக்கலாம் என நினைக்கிறேன் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in