

சென்னை: மக்களவைத் தேர்தல் பரப்புரையின் தொடக்கமாக குடியரசுத் தலைவர் உரை அமைந்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நாடாளுமன்றத்தின் கூட்டத் தொடரைத் தொடக்கி வைத்து குடியரசுத் தலைவர் உரையாற்றியுள்ளார். பழங்குடியின சமூகத்தில் இருந்து நாட்டின் உயர்ந்த பெண் என்ற பெருமை பெற்றவர் ஆற்றும் முதல் உரை, அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை தொடக்கி வைத்துள்ளது. கரோனா நோய்த் தொற்றுப் பரவில் நொறுங்கிப் போன சிறு, குறு தொழில்களுக்கு புத்துயிரூட்டும் செய்தி ஏதும் இடம் பெறவில்லை.
வேலையில்லாதோர் எட்டு சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில், புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்குவது குறித்து ஏதும் குறிப்பிடவில்லை. பன்னாட்டு குழும நிறுவனமான அதானி குழமங்களின் பங்கு மதிப்பு ஊதிப் பெருக்கப்பட்டதும், கணக்கியல் மோசடிகளும் வெளியாகியுள்ள நிலையிலும் நவ தாராளமய பொருளாதாரக் கொள்கையின் தீய விளைவுகள் குறித்து குடியரசுத் தலைவர் உரை கவலைப்படவில்லை.
பல மாநிலங்களில் கூட்டாட்சி கோட்பாடுகள் தகர்க்கப்படும் முறையில் ஆளுநர்கள் செயல்படுவது குறித்து கவனம் செலுத்தவில்லை. இது போன்ற நிகழ்கால நிலவரத்தை பிரதிபலிக்காத குடியரசுத் தலைவர் உரை, அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது, முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டது போன்றவைகளை குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்து, அடிமைத்தனத்தின் அடையாளங்களை முற்றிலுமாக அகற்றி விட்டதாக பெருமை பேசுகிறது.
நாட்டு மக்கள் வாழ்க்கை நிலைகளை கருத்தில் கொள்ளாத குடியரசுத் தலைவர் உரை, அடுத்த ஆண்டு வரும் தேர்தல் பரப்புரை தொடக்கவுரையாக அமைந்துள்ளது என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது'' என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.