Published : 31 Jan 2023 01:01 PM
Last Updated : 31 Jan 2023 01:01 PM

கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம்: கருத்துக்கேட்புக் கூட்டத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம், பாஜக எதிர்ப்பு 

கருத்துக் கேட்பு கூட்டம்.

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திவரும் கருத்துக்கேட்புக் கூட்டத்தில், நினைவுச் சின்னம் அமைப்பதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சட்டப் பஞ்சாயத்து இயக்கம், பாஜக மற்றும் தேசிய பாரம்பரிய மீனவ கூட்டமைப்பு இத்திட்டத்திற்கு தங்களது எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தினை சென்னை மெரினாவில் கடலுக்கு நடுவில் நிறுவுவதற்கான தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கருத்துக்கேட்புக் கூட்டம் கலைவாணர் அரங்கில் செவ்வாய்க்கிழமை (ஜன.31) மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கருத்துக்கேட்புக் கூட்டத்தில், அனைத்து கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், பல்வேறு சூழலியல் அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சட்டப் பஞ்சாயத்து இயக்கம்: இந்தக் கூட்டத்தில் பேசிய சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த ஜி.எம்.சங்கரன், "ஏற்கெனவே கடலை நம்பியிருக்கும் மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்து வரும் சூழலில் இத்தகைய நினைவு சின்னம் அமைக்கக்கூடாது. கூவம் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இந்த நினைவுச் சின்னம் அமைப்பதால் அது மீன் வளத்தைப் பாதிக்கும். மறைந்த முதல்வர் கருணாநிதியின் பெருமைக்காக பேனா நினைவு சின்னத்தைக் கட்டினால் அது அவரது பெயரைக் கெடுக்கும் என்றுகூறி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதேபோல், தேசிய பாரம்பரிய மீனவ கூட்டமைப்பும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தது.

பாஜக : மறைந்த முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கும் திட்டத்திற்கு பாஜக தங்களது எதிர்ப்பை நேரடியாகவே பதிவு செய்திருக்கிறது.

மே 17 இயக்கம்: மே 17 இயக்கத்தின் நிறுவனர் திருமுருகன் காந்தி, இந்த நினைவுச்சின்னம் என்பது நிச்சயமாக அமைக்கப்பட வேண்டும். ஆனால், அதற்குமுன் இந்த திட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் குறைபாடுகளை நிவர்த்தி செய்தபிறகுதான் நினைவுச் சின்னத்தை அமைக்க வேண்டும் என்று தனது நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.

இதேபோல், கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்றுள்ள பல்வேறு மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தங்களது ஆதரவையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர். எதிர்ப்பு தெரிவித்துள்ள பலரும், நினைவுச் சின்னத்தை வேறு ஏதாவது இடத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்தக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x