Published : 31 Jan 2023 04:19 AM
Last Updated : 31 Jan 2023 04:19 AM

ஜெயலலிதா கட்சியையே சிலர் ஏலம் விட்டுக்கொண்டு இருக்கிறார்கள் - ‘உங்களில் ஒருவன்’ தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில்

சென்னை: ஜெயலலிதாவின் கட்சியையே சிலர் ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ‘உங்களில் ஒருவன்’ தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.

திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன்’ தொடர் மூலம் சமூக வலைதளங்களில் மக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். இந்த தொடரில் முதல்வர் அளித்துள்ள பதில்கள் வருமாறு:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பொருட்களை பெங்களூருவில் ஏலம் விடுகிறார்களே?

இங்கு சிலர் அவருடைய கட்சியையே ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் உங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தியாக எதைப் பார்க்கிறீர்கள்?

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் வெளியாக இருப்பதுதான் அண்மையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த செய்தி. சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் கிளை தமிழகத்தில் அமைய வேண்டும் என்று கோரி வருகிறோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் வெளியாவதை அதன் முதல் படியாகவே கருதுகிறேன். மற்ற கோரிக்கைகள் அடுத்தடுத்து நடக்கும் என்று நம்புகிறேன்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கள நிலவரம் எவ்வாறு இருக்கிறது?

இந்த இடைத்தேர்தலே ஒரு துயரமான சூழலில்தான் வந்திருக்கிறது. அரசியலில் தந்தை மறைவுக்கு பிறகு மகனுக்கு வாய்ப்பு வருவதை பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு திருமகன் ஈவெரா மறைந்து, அவரது தந்தை போட்டியிட வேண்டிய நிலை வந்திருக்கிறது. கனத்த இதயத்தோடுதான் ஈவிகேஎஸ் இளங்கோவன் களத்தில் நிற்கிறார். இந்த இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்த நீங்கள், அவர் கொடுத்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளலாமா? இது பின்வாங்கல் இல்லையா?

ஆளுநருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவில்லை. அவையில் அவர் படித்தது அரசின் உரை. ஆகவே, அரசின் சார்பில் தயாரிக்கப்பட்ட உரை, எந்த மாற்றமும் இல்லாமல் அவைக்குறிப்பில் இடம் பெற வேண்டும் என்பதுதான் என்னுடைய தீர்மானம். குடியரசு நாள் தேநீர் விருந்து என்பது காலம் காலமாக இருக்கின்ற நடைமுறை மரபு. அதில் பங்கேற்றது மக்களாட்சியின் மாண்பை காப்பதற்கான பண்பே தவிர, இதில் அரசியல் பின்வாங்கலும் இல்லை, முன்வாங்கலும் இல்லை. எந்த சமரசமும் இல்லை.

கே: ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளதே?

ப: சகோதரர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தை குமரி முனையில் இருந்து நான்தான் தொடங்கி வைத்தேன். அது மிகப்பெரிய வெற்றிப் பயணமாக இருக்கும் என்று அன்றைக்கே சொன்னேன். மக்கள் எழுச்சி, ஒற்றுமை பயணத்தை வெற்றியடைய வைத்திருக்கிறது.

இவ்வாறு முதல்வர் பதிலளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x