Published : 31 Jan 2023 06:26 AM
Last Updated : 31 Jan 2023 06:26 AM

மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாள்: ஆளுநர், முதல்வர் மலர் தூவி அஞ்சலி

மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் காந்தி படத்துக்கு நேற்று மலர்கள் தூவி அஞ்சலி செலுத்திய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், செய்தித் துறை அமைச்சர் மு.பெ .சாமிநாதன் , தயாநிதி மாறன் எம்,பி. தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலர் இரா.செல்வ ராஜ், செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் வீ.ப.ஜெய சீலன் | படம் ம.பிரபு |

சென்னை: மகாத்மா காந்தியின் 76-வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். மேலும், தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சென்னை கிண்டி ராஜ்பவனில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அவரது தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், ஆளுநர் மாளிகை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

இதேபோல, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள காந்தி சிலைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து, அருங்காட்சியகத்தில் செய்தி-மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘காந்தியும் உலக அமைதியும்’ என்ற புகைப்படக் கண்காட்சியை ஆளுநரும், முதல்வரும் திறந்துவைத்தனர்.

பின்னர், தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிகளில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, தலைமைச் செயலர் வெ.இறையன்பு, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செய்தி-மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன், சுற்றுலாத் துறை செயலர் பி.சந்திரமோகன், இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காந்தி நினைவு நாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், “இந்தியா என்ற உயர்ந்த சிந்தனையைக் கட்டமைக்க, தனது உடல், பொருள் என அனைத்தையும் தந்து, நாட்டின் உயிராக மாறியவர் அண்ணல் காந்தியடிகள். இந்திய சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை ஏற்படுத்த அமைதி வழியில் போராடிய அவர், ஒரு மதவெறியனின் வன்முறைக்குப் பலியான இந்நாளில், ஒற்றுமை மிளிரும் சமூகமாகத் திகழ நாம் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தனது ட்விட்டர் பதிவில், “காந்தியை நினைக்காமல், அவரது பெயரை உச்சரிக்காமல் ஒருநாளும் என் வாழ்வில் கடந்ததில்லை. முயற்சித்தால் எவரும் காந்தியாக முடியும் என்பதன் சாட்சியாக எத்தனையோ காந்தியர்கள் இன்றைக்கும் இருக்கிறார்கள். காந்தியாக முயல்பவர்களில் நானும் ஒருவன். நினைவு நாளில் வணங்குகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, திக தலைவர் கி.வீரமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோரும் நினைவு நாள் அஞ்சலி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x