தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்

தமிழகத்தில் மின்சார இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள்
Updated on
1 min read

சென்னை: மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று (ஜன. 31) கடைசி நாளாகும். இவ்வாறு இணைக்காதவர்கள் மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையிலான மின்சாரத்தைப் பயன்படுத்தும் மின் நுகர்வோர் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் பயனாளிகளின் விவரங்களை ஆதார் எண்ணுடன் இணைக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து, நுகர்வோரின் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த ஆண்டு நவ. 15-ம் தேதி மின் வாரியம் தொடங்கியது.

இதற்கான கடைசி நாளாக கடந்த ஆண்டு டிச. 31-ம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான மின் நுகர்வோர், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்காததால், இதற்கான காலக்கெடுவை ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டித்து மின் வாரியம் உத்தரவிட்டது.

மேலும், தமிழகம் முழுவதும் 2,811 மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டன. நேற்று வரை 2.34 கோடி மின் நுகர்வோர், தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துள்ளனர். இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசம் இன்றுடன் (ஜன. 31) நிறைவடைகிறது. இந்த காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத நுகர்வோர், மின் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால், மின் பயன்பாடு கணக்கெடுத்த 20 நாட்களுக்குள் மின் கட்டணம் செலுத்த முடியாததுடன், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். மின் இணைப்பு துண்டிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in