

தண்ணீர் பஞ்சம், நீட் பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை பிரச்சினை என இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில்தான் சட்டப்பேரவையை கூட்ட வேண்டுமென்று தொடர்ந்து திமுக சார்பில் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட தென்னூரில் உள்ள பெரிய நாச்சியம்மன் கோயில் குளம் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிடச் சென்றபோது, சென்னை விமான நிலையத்தில் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
''தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக, நேற்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் மூலம் தீர்வு காணப்பட்டிருக்கிறது. 1,250 கோடி ரூபாய் முதல் கட்டமாக வழங்குவதென்றும், மீதமுள்ள தொகையை படிப்படியாக வழங்கவும் பேச்சுவார்த்தை மூலம் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த முடிவுக்கு நான் உள்ளபடியே மகிழ்ச்சியடைகிறேன். இதன் மூலம் அவர்களுடைய வேலை நிறுத்தம் வாபஸ் வாங்கப் பெற்று, இன்று காலையிலிருந்து அவர்கள் பணிக்கு திரும்பியிருக்கிறார்கள். இதை வரவேற்கிறேன். எனவே, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களுடைய கோரிக்கைகளில் இருக்கக்கூடிய மேலும் சில பிரச்சினைகளுக்கும் உடனடியாக இந்த அரசு தீர்வு காண வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
சட்டப்பேரவையை மீண்டும் கூட்ட வேண்டுமென்று கோரிக்கை விடுத்தேன். அதற்கு சபாநாயகரும், முதல்வரும் சட்டப்பேரவையை கூட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்கள்.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நேரத்தில், சபாநாயகர் கட்சிகளின் தலைவர்களை அழைத்து, அலுவலகக்குழு கூட்டத்தில் கலந்து பேசியபோது, ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் முடிவுற்றதற்கு பிறகு, மானியக் கோரிக்கையின் மீது விவாதம் நடைபெறும் என்று கலந்தாலோசிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் அன்றைக்கு முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஆர்.கே.நகர் தொகுதியின் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுவிட்டது.
அதன் பிறகு, நானே நேரடியாக சபாநாயகரை, முதல்வரை சந்தித்து, அலுவலகக்குழு கூட்டத்தில் எடுத்த முடிவுகளின் அடிப்படையில், இப்போது ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிற காரணத்தால் உடனடியாக சட்டப்பேரவையை கூட்டுங்கள், விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகள் இருக்கின்றன, நீட் பிரச்சினை இருக்கிறது, குடிநீர் பிரச்சினை தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கிறது, எனவே, இதுகுறித்தெல்லாம் பேச உடனடியாக சட்டப்பேரவையை கூட்டுங்கள் என்று நாங்கள் அப்போதே கோரிக்கை வைத்திருந்தோம்.
ஆனால், திடீரென்று சட்டப்பேரவை கூட்டத் தொடரை முடித்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட காரணத்தால்தான், நேற்றைய தினம் திமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி, சட்டப்பேரவையை உடனடியாக கூட்ட வேண்டும் மற்றும் திடீரென்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடித்துவைக்கப்பட்டதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று தீர்மானங்கள் போட்டு, அந்த தீர்மான நகலை திமுக சட்டமன்ற கொறடா சக்கரபாணி மூலம் சபாநாயகரிடத்தில் கொடுத்திருக்கிறோம். முதல்வரிடமும் கொடுத்திருக்கிறோம்.
அதன் பிறகு, முதல்வரும் சபாநாயகரும் இதுகுறித்து கலந்துபேசி முடிவெடுப்பதாக உறுதிமொழி தந்திருக்கிறார்கள். தொடர்ந்து, அவர்கள் கலந்து பேசி சட்டப்பேரவையை கூட்டும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன.
இதற்கிடையில், நிதித்துறை அமைச்சராக, மீன்வளத்துறை அமைச்சராக, இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சூப்பர் டூப்பர் அமைச்சராக செயல்படும் ஜெயக்குமார் ஒரு செய்தியை வெளியிட்டு இருக்கிறார். திமுக ஆட்சியில் இதுபோன்ற நிலை ஏற்பட்டதாக சொல்லியிருக்கிறார். அப்போது நாடாளுமன்ற தேர்தல், அதுவும் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற அந்த சூழ்நிலை இருந்தது.
ஆனால், இப்போது இருக்கக்கூடிய நிலை அப்படியல்ல. தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடிக் கொண்டிருக்கிறது. நீட் பிரச்சினை, விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடிய பிரச்சினை என இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில்தான் சட்டப்பேரவையை கூட்ட வேண்டுமென்று தொடர்ந்து திமுக சார்பில் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது. அதை அவர்கள் சட்டப்படி சந்திப்பார்கள் என்று ஏற்கெனவே நான் தெரிவித்துள்ளேன். ஆனால், என்னைப் பொறுத்தவரையில், அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன ராவ் வீடு மற்றும் அலுவலகம், அவரது மகன் வீடு என இப்படி பல இடங்களில் இதற்கு முன்பாக சோதனைகள் நடந்திருக்கின்றன.
அவையெல்லாம் இப்போது எந்த நிலையில் இருக்கின்றன? அவற்றின் மீதான நடவடிக்கைகள் எல்லாம் இப்போது முடங்கியிருக்கின்ற காட்சிகளை பார்க்கின்றபோது, அரசியல் நோக்கத்தோடு இதையெல்லாம் மத்திய அரசு அணுகக் கூடாது, மத்தியில் உள்ள சிபிஐ அமைப்பும், வருமான வரித்துறையினரும் அரசியல் நோக்கத்தோடு அணுகக் கூடாது என்பதுதான் எங்களின் கருத்து'' என்று ஸ்டாலின் கூறினார்.