

கோவை: நாட்டு மக்கள் நலனுக்காக தைப்பூச திருவிழாவுக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளதாக கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு, கோவையில் இருந்து பழநிக்கு வானதி சீனிவாசன் நேற்று பாதயாத்திரை புறப்பட்டார். ஈச்சனாரி விநாயகர் கோயிலில் இருந்து பாத யாத்திரை புறப்பட்ட அவரை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வழியனுப்பிவைத்தார்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறும்போது, “ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் விரதம் இருந்து தைப்பூச திருவிழா தினத்தன்று முருகனை தரிசனம் செய்வது வழக்கம். நாட்டு மக்களும் பிரதமர் மோடியும் நலமாக இருக்க வேண்டும். தமிழக மக்களுக்கு அனைத்து வளமும் கிடைக்க முருகன் அருள் புரிய வேண்டி இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளேன்” என்றார்.
நேற்று மதியம் சாயிபாபா காலினியில் அமைந்துள்ள ஸ்ரீ நாகசாயி கோயிலில் அண்ணாமலை தரிசனம் மேற்கொண்டார். கோயில் அறக்கட்டளை சார்பில் அவருக்கு வரவேற்பளிக்கப்பட்டது.