

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்காக, 1,300 அலுவலர்களுக்கு, வரும் பிப்ரவரி 6-ம் தேதி முதல்கட்ட பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக, 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடி மையங்களில், வாக்காளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது. இடைத்தேர்தல் பணிக்காக 1,300 அலுவலர்கள் (ஆசிரியர்கள்) நியமிக்கப்பட்டுள்ளன.
ஒரு வாக்குச் சாவடி மையத்துக்கு நான்கு பேர் வீதம் 952 பேர், கூடுதலாக 38 சதவீதம் பேர் என மொத்தம் 1,300 அலுவலர்களுக்கு, மூன்று கட்டமாக பயிற்சி அளிக்கப்படவுள்ளது. இதன்படி, வரும் பிப்ரவரி 6-ம் தேதி முதல் கட்ட பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இந்த பயிற்சியில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் விதம், அவற்றில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதனை சரி செய்யும் வழிமுறை, வாக்குப்பதிவின்போது பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்படவுள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.