

ஓசூர்: உத்தனப்பள்ளியில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் விளை நிலங்களில் கருப்புக் கொடி ஏற்றியும், கருணைக் கொலை செய்ய வலியுறுத்தியும் பேனர்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓசூர் அருகே உத்தனப்பள்ளி, நாகமங்கலம், அயர்னப்பள்ளி ஆகிய 3 ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலப்பரப்பில் 5-வது சிப்காட் அமைக்க விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறு, குறு விவசாயிகள் உத்தனப்பள்ளி பேருந்து நிலையம் அருகே தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று 26-வது நாளாகப் போராட்டம் நடந்தது.
மேலும், நேற்று விளை நிலங்களில் விவசாயிகள் கருப்புக் கொடி ஏற்றியும், கருணைக் கொலை செய்ய வலியுறுத்தியும் பேனர்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பேனரில், `உத்தனப்பள்ளியில் 5-வது சிப்காட் அமைக்க உள்ளது. அதற்கு நில அபகரிப்பு செய்து வருகின்றனர். இதனை தெரிந்து கொண்டேன்.
இது உண்மை என்றால் நானும் பாதிக்கப்படுகிறேன். என் நிலத்துக்கு நஷ்ட ஈடாக, பணமோ, வேறு நிலமோ எனக்குத் தேவையில்லை. இழப்பீட்டுக்குப் பதிலாக என்னை குடும்பத்தோடு கருணை கொலை செய்யுமாறு தமிழக அரசை கையேந்தி வேண்டிக் கொள்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பேனரை புகைப்படம் எடுத்து வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். 3 ஊராட்சிகளில் 3,034 ஏக்கர் நிலப்பரப்பில் 5-வது சிப்காட் அமைக்க விளை நிலங்களைக் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.