Published : 31 Jan 2023 06:10 AM
Last Updated : 31 Jan 2023 06:10 AM
சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.9 கோடியில் புவியியல் தகவல் முறைமை மையம் அமைக்க அனுமதி அளித்தல் உள்ளிட்ட 80 தீர்மானங்கள் மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
சென்னை மாநகராட்சி மாமன்றக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், ஆணையர் ககன்தீப் சிங் பேடி, துணை மேயர் மு.மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியவுடன், சுதந்திரத்துக்காகப் போராடி உயிர்நீத்த தியாகிகளுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, சென்னையை திறந்த வெளியில் அசுத்தம் செய்யாத நகரமாகவும், குப்பை இல்லாத 3 நட்சத்திர அந்தஸ்து கொண்டநகரமாகவும் அறிவித்தல், கட்டிட அனுமதியை ஆன்லைனில் பெறும்வசதியை வழங்குதல் ஆகியவற்றுக்கு அனுமதி அளித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், 616 மூன்று சக்கர குப்பை அள்ளும் சைக்கிள்களுக்கு மாற்றாக ரூ.6.90 கோடியில் 350 பேட்டரி வாகனங்கள் வாங்குதல், மாநகராட்சி உட்கட்டமைப்புகளை மேம்படுத்தல், கட்டிடங்களை ட்ரோன், செயற்கைக்கோள் தகவல்கள் மூலம் அளவிட்டு, சொத்து வரியை நிர்ணயித்தல், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள் இருக்கும் இடங்களைக் குறிப்பிட்டு வரைபடம் தயாரித்தல், மழைநீர் வடிகால்களை மாற்றியமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள புவியியல்தகவல் முறைமை (GIS) மையத்தைரூ.9.43 கோடியில் அமைக்க அனுமதிக்கப்பட்டது.
மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே உருவாக்கப்பட்ட 2 ஆயிரம்ஏரியா சபைகளின் செயலர்கள் நியமிக்கப்பட்டதற்கு அனுமதி அளித்தல் உள்ளிட்ட மொத்தம் 80 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
திருவொற்றியூர் மண்டலக் குழுத் தலைவர் தனியரசு, கவுன்சிலர்களுக்கு மாத ஊதியம் வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக அரசிடம்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் நல்ல தகவல் வரும் என்றும் மேயர் பிரியா பதில் அளித்தார்.
மாமன்ற கணக்குக் குழுத் தலைவர் தனசேகர் பேசும்போது, கவுன்சிலர் மேம்பாட்டு நிதியை ரூ.1 கோடியாக உயர்த்த வேண்டும் என்றார். 63-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் சிவ.ராஜசேகரன் பேசும்போது, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை நிறைவு செய்த ராகுல்காந்தி, தேச ஒற்றுமையை நிலைநிறுத்தி, தேசிய தலைவராகத் உயர்ந்திருப்பதாக தெரிவித்தார்.
35-வது வார்டு மதிமுக கவுன்சிலர் பேசும்போது, மாமன்றக் கூட்டங்கள் இனி தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்க வேண்டும். சாலைகளில் தலைவர்கள் சிலை உள்ளபகுதியை வண்ண விளக்கு, செயற்கை நீரூற்றுடன் அழகுபடுத்த வேண்டும். வார்டு கவுன்சிலர்கள் கொடியேற்ற நிரந்தரக் கொடிமரங்கள் அமைக்க வேண்டும். மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தைப் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதில் அளித்த மேயர்,இனி வரும் கூட்டங்கள் தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கப்படும். மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தைப் பராமரிக்க, உரியநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT