

மாமல்லபுரம்: மாமல்லபுரத்துக்கு ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் வருவதை முன்னிட்டு நாளை (பிப்.1-ம் தேதி) சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை என தொல்லியல் துறை தெரிவித்துள்ளது. மேலும் பாதுகாப்பு நடவடிக்கையாக தனியார் விடுதி உரிமையாளர்களுடன் மாமல்லபுரம் டிஎஸ்பி நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஜி20 நாடுகளின் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதை தொடர்ந்து, பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி இன்று தொடங்கி பிப்.2-ம் தேதி வரை சென்னையில் முதலாவது கல்விக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் சீனா, பிரேசில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 100 பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்நிலையில், இவர்கள் நாளை மாலை 3 மணி முதல் 6 மணி வரை மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை பார்வையிட வருகின்றனர். இதற்காக தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. மேலும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.
மாநாட்டு பிரதிநிதிகள் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒருபகுதியாக நாளை மாமல்லபுரம் வர சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை என தொல்லியல் துறை அறிவித்துள்ளது. அன்றைய தினம் ஆன்லைன் டிக்கெட் மற்றும் கவுன்ட்டர்களில் டிக்கெட் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மாமல்லபுரம் டிஎஸ்பி ஜகதீஸ்வரன் தலைமையில் விடுதி உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், வெளிநாட்டினர் வரும் நாளில் விடுதிகளில் யாரும் தங்கியிருக்கக் கூடாது. நீண்ட நாட்களாக யாராவது தங்கியிருந்தால் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் மற்றும் வெளிநபர்களை விடுதியில் அனுமதிக்க கூடாது, புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும், விடுதிகள் மற்றும் பொது இடங்களில் மோப்ப நாய் மூலம் போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.