

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் ரூ.10 கோடியில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மேயர் இந்திராணி தெரிவித்தார்.
மதுரை மாட்டுத்தவாணி பேருந்து நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்புப் பணிகள் நடைபெறவில்லை. பல இடங்களில் பேருந்து நிலைய மேற்கூரை விரிசல் விட்டுள்ளது. பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. பேருந்துகள் வந்து செல்லும் பகுதி குண்டும், குழியுமாக உள்ளது.
பேருந்து நிலையத்தை சீரமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மேயர் இந்திராணி, ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மண்டலத் தலைவர் சரவணபுவனேஸ்வரி, நகரப் பொறியாளர் அரசு, நகர்நல அலுவலர் வினோத் குமார் ஆகியோர் பேருந்து நிலையம் முழுவதையும் நேற்று சுற்றிப் பார்த்தனர்.
மேயர் அங்கிருந்த பயணிகள், கடை வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் மேயர் கூறியதாவது: இப் பேருந்து நிலையம் கட்டி 20 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் முழுமையாக பராமரிக்க வேண்டியுள்ளது. இதற்காக ரூ.10 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிதி வந்ததும் பேருந்து நிலையத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கப்படும். பயணிகளுக்கான இருக்கைகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்படும். அதற்கு முன்னதாக தற்காலிகமாக அவசர தேவையுள்ள சில சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்று கூறினார்.