நீதிபதி கர்ணனுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை மறுபரிசீலனை செய்க: திருமாவளவன் கோரிக்கை
கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள சிறைத்தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
நீதிபதியை மட்டுமல்ல, ஒரு சாதாரண குடிமகனைக்கூட மனநிலை சரியாக உள்ளதாக என்று பரிசோதனை செய்ய உத்தரவிடுவது சட்டபூர்வமானதுதானா?
உச்ச நீதிமன்றத்தின் மாண்பைக் குலைக்க விரும்பவில்லை. ஆனால் என்னுடைய கருத்தை முன்வைக்க விரும்புகிறேன்.
ஒரு நீதிபதியை விசாரிக்க வேண்டுமெனில், நாடாளுமன்ற இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். நீதிபதி கர்ணனுக்கு அரசியலமைப்புச் சட்டத்தைப் பின்பற்றித்தான் சிறை தண்டனை விதிக்கப்பட்டதா என்று தெரியவில்லை.
இப்போது ஊடகங்களுக்கும் வாய்ப்பூட்டு போடப்பட்டிருக்கிறது.
நீதிபதி கர்ணனுக்கு, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள சிறைத்தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தண்டனை பின்னணி
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு தண்டனை விதித்து நீதித்துறையில் பரபரப்பை ஏற்படுத்திய கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன். இதையடுத்து கர்ணனுக்கு 6 மாதம் சிறைதண்டனை விதித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூன்று தினங்களுக்கு முன் உத்தரவிட்டனர். இதனால் நீதித்துறையில் பரபரப்புச் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
கர்ணன் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அவரது சகோதரர் அறிவுடைநம்பி கர்நத்தம் கிராமத்தில், கிராம மக்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
