

ராமேசுவரம்: வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றதால் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் கூண்டு நேற்று ஏற்றப்பட்டது.
தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி திங்கட்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. கொழும்பிலிருந்து வடகிழக்கே 810 கி.மீ. மற்றும் காரைக்காலில் இருந்து தென்கிழக்கே 880 கி.மீ. தொலைவில் இந்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது.
இது மேலும் வலுவடைந்து, பிப்.1-ம் தேதி இலங்கை கடற்பகுதிகளை சென்றடையக்கூடும். இதனால் தமிழக கடலோர மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள்,தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிகளிலும், சூறாவளிக் காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் அதிகபட்சமாக 65 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் ராமேசுவரம் அருகே பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டது.