நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று ஏற்றப்பட்டுள்ள ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.
நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று ஏற்றப்பட்டுள்ள ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு.

மயிலாடுதுறை, காரைக்காலில் பரவலாக மழை: விவசாயிகள் அச்சம்

Published on

மயிலாடுதுறை / காரைக்கால் / நாகப்பட்டினம்: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் நேற்று பரவலாக மிதமான மழை பெய்தது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, செம்பனார்கோவில் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் நேற்று அதிகாலை முதல் காலை 10 மணி வரை மழை பெய்தது. தொடர்ந்து, நாள் முழுவதும் மேக மூட்டமாகக் காணப்பட்டது.

நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சீர்காழியில் 19 மி.மீ, செம்பனார்கோவிலில் 15.80 மி.மீ, கொள்ளிடத்தில் 10 மி.மீ, மயிலாடுதுறையில் 8.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதேபோல, காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால், வரிச்சிக்குடி, கோட்டுச்சேரி, நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது.

நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி காரைக்காலில் 13.6 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. காரைக்காலில் உள்ள தனியார் கப்பல் துறைமுகத்தில் நேற்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சம்பா நெற்பயிர் அறுவடைப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

இந்நிலையில் நேற்று திடீரென மழை பெய்ததால் அறுவடைப் பணிகள் பாதிக்கப்பட்டன. நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் மழை பெய்வது விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, தொலைதூரத்தில் புயல் சின்னம் உருவாகி இருப்பதை பொதுமக்களுக்கு அறிவிக்கும் வகையில் நாகை துறைமுக அலுவலகத்திலும் நேற்று பிற்பகல் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in