Published : 31 Jan 2023 04:27 AM
Last Updated : 31 Jan 2023 04:27 AM

நெல்லை மேயர் மீது சரமாரி குற்றச்சாட்டு: மாநகராட்சி கூட்டத்தில் வெடித்த திமுக உட்கட்சி மோதல்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் கடந்த மாதம் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாநகராட்சியில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலும் மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் பலரும் பேசியதுடன், அவருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். மாநகராட்சி கூட்டத்துக்கு மேயர் பி.எம். சரவணன் தலைமை வகித்தார். துணைமேயர் கே.ஆர். ராஜு, ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தை தொடங்கி வைத்து மேயர் பேசும்போது, “திருநெல்வேலி மாநகராட்சியில் விரிவாக்க பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் பொருட்டுரூ.35 கோடியில் முறப்பநாடு கூட்டுகுடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. ரெட்டியார்பட்டியில் இருந்துசாராள் தக்கர் கல்லூரி வரை சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெறவுள்ளன” என்றார்.

கமிஷன் பேசுகின்றனர்: திமுக கவுன்சிலர் ரவீந்தர் பேசும்போது, “மேயர் அறையில் திமுக நிர்வாகிகள் அமர்ந்துகொண்டு ஒப்பந்ததாரர்களிடம் கமிஷன் பேசுகின்றனர். கவுன்சிலர்களை உள்ளே அனுமதிப்பதில்லை” என்றார். இதற்கு “தனிப்பட்ட முறையில் யாரையும் வரக்கூடாது என்று கூறவில்லை.

கவுன்சிலர்கள் பலரும் என்னை சந்தித்து பேசுகிறார்கள்” என மேயர் தெரிவித்தார். இது தொடர்பாக மேயருக்கும் கவுன்சிலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திமுக கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் பேசும்போது, “திமுக ஆட்சிக்கு கெட்டப்பெயரை ஏற்படுத்தும் வகையிலான செயல்பாடுகளை நிறுத்த வேண்டும்” என்றார். அப்போது, “கவுன்சிலர்கள் வார்டுபிரச்சினைகளை பேச வேண்டும். மன்றத்தின் மாண்பை காக்கும் வகையில் பேச வேண்டும்” என்று, ஆணையர் கண்டிப்புடன் கேட்டுக்கொண்டார்.

இதற்கிடையே திமுக கவுன்சிலர்களான சுந்தர், ரவீந்திரர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. “தனிப்பட்ட பிரச்சினைகளை அரங்கத்தில் பேச வேண்டாம். என்மீது தவறுகள் இருந்தால் அதை சரிசெய்துகொள்ளலாம். திமுக ஆட்சிக்கு கெட்டபெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம்” என்று மேயர் பேசினார்.

எந்த பணியும் நடக்கவில்லை: கவுன்சிலர் சுந்தர் பேசும்போது, “தச்சநல்லூரில் பாதாள சாக்கடை பணிக்காக தோண்டிய பள்ளங்களை மூடவில்லை. சாலைகள் சேதமடைந்து காணப்படுகின்றன. அரியநாயகிபுரம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்காக சாலைகளை தோண்டியுள்ளனர்.

ஆனால் சரிசெய்யவில்லை. கடந்த 11 மாதமாக எந்த பணிகளும் நடைபெறவில்லை. இன்னும் ஓராண்டில் மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், மக்களை சந்தித்து எப்படி வாக்கு கேட்க முடியும்” என்றார். இதைத் தொடர்ந்து பேசிய திமுக கவுன்சிலர் அஜய் “கட்சி அலுவலகம்போல் மேயர் அலுவலகம் செயல்படுகிறது.

திருநெல்வேலி மண்டலத்திலுள்ள 16-வது வார்டுக்குள் திமுகவைச் சேர்ந்த மண்டல தலைவரையே வரக்கூடாது என்று மேயர் எப்படி கூறலாம்” என்றார். அதற்கு பதில் அளித்த மேயர், “நான்அவ்வாறு கூறவில்லை. மேயர் அறைக்குள் கட்சியினர் வந்ததை அரசியலாக்க வேண்டாம்” என்றார். அப்போது மேயருக்கும், திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது.

“என்னை வார்டுக்குள் வர வேண்டாம் என்று மேயர் கூறினார்” என்று, மண்டல தலைவர் மகேஸ்வரி தெரிவித்தார். திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அதிமுக கவுன்சிலர் சந்திரசேகர், தனது குடும்ப விழா அழைப்பிதழை ஒவ்வொரு கவுன்சிலருக்கும் விநியோகம் செய்து கொண்டிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x