Published : 31 Jan 2023 04:25 AM
Last Updated : 31 Jan 2023 04:25 AM

காஞ்சனகிரி மலைக்கு செல்ல தடை விதிக்கும் ஊராட்சி மன்ற நிர்வாகிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

ராணிப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலை கோயிலுக்கு செல்ல தடைவிதிக்கும், முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகிகளை கண்டித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட லாலாப்பேட்டை பொதுமக்கள்.

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப் பேட்டை கிராமத்தின் அருகே பழமை வாய்ந்த காஞ்சனகிரி மலையில் திருகாஞ்சனேஸ்வரர் கோயில் உள்ளது.

இந்த கோயிலை லாலாப் பேட்டை ஊராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பல ஆண்டுகளாக நிர்வகித்து வந்ததாக கூறப் படுகிறது.

இந்நிலையில் முகந்த ராயபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகத்தை சேர்ந்த நிர்வாகிகள் சிலர், சமீபகாலமாக இந்த மலைக் கோயில் தங்கள் ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் வருவதாகவும், இனிமேல் இந்த கோயிலை நிர்வகிப்பதை இந்த ஊராட்சி நிர்வாகமே எடுத்து நடத்தும், நீங்கள் கோயி லுக்கு வரவேண்டாம் என கூறி வருகின்றனர்.

மேலும், லாலாப்பேட்டை மக்கள் முகுந்தராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி, குளங்கள், மயானத்தை பயன்படுத்த அனுமதி இல்லை என தெரிவிப்பதாக கூறப்படுகிறது.

இதனால், ஆத்திரமடைந்த லாலாப்பேட்டையைச் சேர்ந்த வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று முன்தினம் முகுந்தராயபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகிகளை கண்டித்து கடையடைப்பு மற்றும் கோயில் மலையடிவாரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, லாலாப்பேட்டை மக்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் மக்கள் குறைதீர்வு கூட்டம் நாளான நேற்று மாவட்ட ஆட்சி யரை சந்தித்து மனு அளிக்க பேரணியாக வந்தனர்.

இந்த தகவலறிந்த ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமார், துணை காவல் கண்காணப்பாளர் பிரபு மற்றும் வருவாய் அதிகாரிகள் அங்கு சென்று பொதுமக்கள் லாலாப்பேட்டையில் இருந்து முத்தாலம்மன் கோயில் அருகே தடுத்து நிறுத்தினர். இதனால், பொதுமக்கள் கோயில் வளா கத்தின் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாதுகாப்பு கருதி காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, வருவாய் கோட்டாட்சியர் வினோத் குமார் ‘உங்கள் புகார்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து இரண்டு ஊராட்சி நிர்வாகத்தினரிடமும் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மூலமாக விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதியளித்தார்.

இதையடுத்து, ஒன்றரை மணி நேரத்துக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x