Published : 30 Jan 2023 07:36 PM
Last Updated : 30 Jan 2023 07:36 PM
மதுரை: பிபிசி - குஜராத் ஆவணப்படத்தை மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் இன்று (ஜன.30) திரையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை போலீஸார் கைது செய்தனர்.
கடந்த 2002-ல் குஜராத் மாநில முதல்வராக பிரதமர் நரேந்திரமோடி இருந்தபோது கோத்ராவில் ரயில் எரிப்பு சம்பவத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் வன்முறை கலவரம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக லண்டன் பிபிசி நிறுவனம், ‘இந்தியா- மோடிக்கான கேள்விகள்’ என்ற ஆவணப்படம் தயாரித்து சிலநாட்களுக்கு முன் வெளியிட்டது. அந்த ஆவணப்படத்தை இந்தியாவில் ஒளிபரப்ப மத்திய பாஜக அரசு தடை விதித்தது. நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக மாணவர் அமைப்பினர் ஆவணப்படத்தை பொதுவெளியில் திரையிட்டு வருகின்றனர்.
அதேபோல், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுஇடத்தில் திரையிட முயன்றபோது அதனை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இந்நிலையில், திங்கட்கிழமை மாலை ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகரில் ஆவணப்படத்தை திரையிடுவதாக வாலிபர் சங்கத்தினர் அறிவித்திருந்தனர். ஆனால், போலீஸார் இதற்கு அனுமதி மறுத்தனர். இந்த தடையை மீறி ஆவணப்படத்தை வெளியிடுவதாக அறிவித்ததால் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டனர்.
இதனைத்தொடர்ந்து ஆவணப்படம் திரையிட காவல் துறை அனுமதி மறுத்ததை கண்டித்தும், திரையிட அனுமதி வழங்கக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர்.
இதனைத்தொடர்ந்து அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் செல்வா தலைமையில் மாவட்டத் துணைச்செயலாளர் வேல்தேவா, நிர்வாகிகள் கவுதம், பாரதி, நவீன் உள்பட 30-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...