Published : 30 Jan 2023 07:18 PM
Last Updated : 30 Jan 2023 07:18 PM
சென்னை: ‘காந்தியடிகளின் தியாக வரலாற்றினை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் இன்று (ஜன.30) முதல் பிப்ரவரி 5-ம் தேதி சிறப்பு புகைப்படக் கண்காட்சி. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த கண்காட்சியை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம்’ என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உத்தமர் காந்தியடிகளின் 76-ஆவது நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (30.01.2023) சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் உள்ள உத்தமர் காந்தியடிகளின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும், உத்தமர் காந்தியடிகளின் தியாக வரலாற்றினை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், அன்னாரது 76ஆவது நினைவு நாளினை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இன்று (30.01.2023) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், சென்னை, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் “காந்தியும் உலக அமைதியும்” என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த சிறப்புப் புகைப்படக் கண்காட்சினை திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.
இப்புகைப்படக் கண்காட்சியில் உத்தமர் காந்தியடிகளின் அகிம்சை வழியிலான சுதந்திரப் போராட்ட வரலாற்றினையும், அன்னார் காட்டிய பாதையில் தற்போதைய உலக அமைதியினை வழியுறுத்தும் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், புத்தகங்களைக் கொண்டு உத்தமர் காந்தியடிகளின் உருவமும் அமைக்கப்பட்டுள்ளது.
இப்புகைப்படக் கண்காட்சியினை பொதுமக்கள், கல்லூரி, பள்ளி மாணவ மாணவிகள் பார்வையிட ஏதுவாக 30.01.2023 முதல் 05.02.2023 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த சிறப்பு புகைப்படக் கண்காட்சியை அனைவரும் கண்டுகளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அனுமதி இலவசம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT