பட்டியலின மக்களின் கோயில் நுழைவு முதல் ஹிண்டர்ன்பர்க் பதிலடி வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.30, 2023

பட்டியலின மக்களின் கோயில் நுழைவு முதல் ஹிண்டர்ன்பர்க் பதிலடி வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஜன.30, 2023
Updated on
3 min read

தி.மலை முத்துமாரியம்மன் கோயிலில் பட்டியலின மக்கள் தரிசனம்: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், தை மாதம் நடைபெறும் திருவிழாவில் பொங்கலிட்டு வழிபடவும் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் வழிபாடு செய்ய, பிற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

முத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யவும், பொங்கலிட்டு வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் பட்டியலின மக்கள் வலியுறுத்தினர். அவர்களுக்கு ஆதரவாக இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் ஒரு சில அமைப்புகள் குரல் எழுப்பியது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பட்டியலின மக்கள் மனு அளித்திருந்தனர். அதில், முத்துமாரியம்மன் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும், தை மாத விழா காலங்களில், எங்களது சமூகத்துக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், தீண்டாமை ஒழிப்பு உறுதி ஏற்கப்படும் மகாத்மா காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ம் தேதியான திங்கள்கிழமை முத்துமாரியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் சுவாமி தரிசனம் செய்ய பட்டியலின மக்கள் முடிவு செய்திருந்தனர். இதன்படி, தென்முடியனூர் கிராமத்தில் பழமையான முத்துமாரியம்மன் கோயிலில் ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில், பூஜை மற்றும் பொங்கல் வைப்பதற்கான பொருட்களுடன் முத்துமாரியம்மன் கோயிலில் நுழைந்தனர். பின்னர் அவர்கள், பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இதன்மூலம் 70 ஆண்டு கோரிக்கை நிறைவேற்றப்பட்டதாக பட்டியலின மக்கள் உருக்கமாக தெரிவித்தனர்.

தமிழகத்தில் பிப்.1-ல் 11 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, திங்கட்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதனால் தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பிப்ரவரி 1-ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் தேதியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். இதன்படி,12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 17ம் தேதியும், 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ம் தேதியும் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை வழக்கு: தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி இபிஎஸ் தாக்கல் செய்த மனு தொடர்பாக 3 நாட்களில் தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மீதான விசாரணை மட்டுமே நடைபெறுமே தவிர அதைத் தாண்டி வேறு எந்த ஒரு விவகாரத்திற்குள்ளும் நாங்கள் செல்ல மாட்டோம் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

‘கட் அண்ட் பேஸ்ட் அண்ணாமலை’ - திமுக சாடல்: "மக்களுக்குப் பயன் தரும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும்போது இருக்கும் சிக்கல்கள் பற்றித் திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு பேசிய கருத்துகளை வெட்டியும், ஒட்டியும் திரித்து, உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிட்டு அரசியல் அநாகரிகத்தின் உச்சத்திற்கே சென்று அசிங்கமான அரசியல் நடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயலுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று என்று திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ‘கட் அண்ட் பேஸ்ட் அண்ணாமலை’ என்று அவர் கடுமையாக சாடியுள்ளார்.

இதற்கிடையே தேர்தல் பணிகள் சார்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் வீடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி. பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி. சந்தேகம் இருப்பின், இந்த காணொளியை பார்க்கவும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பிபிசி ஆவணப்படத் தடைக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க ஒப்புதல்

பிரதமர் மோடி, 2002-ம் ஆண்டு குஜராத் கலவரம் குறித்து பிபிசி தயாரித்துள்ள ‘இந்தியா - மோடிக்கான கேள்விகள்’ என்ற ஆவணப்படத்திற்கு மத்திய அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள பொதுநல மனுக்கள் பிப்ரவரி 6-ம் தேதி விசாரணைக்கு எடுத்தக்கொள்ள உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு: இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு நிகழ்ச்சி ஸ்ரீநகரில் உள்ள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்தது. கடும் பனிப்பொழிவுக்கு இடையில் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, கட்சியின் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் முன்னிலையில் ராகுல் காந்தி தேசிய கொடியை ஏற்றினார்.

முன்னதாக யாத்திரையின் நிறைவைக் குறிக்கும் வகையில், பாந்தசவுக்கில் உள்ள முகாம் அலுவலகத்தில், தேசிய கீதம் இசைக்கப்பட தேசியக் கொடியை அவர் ஏற்றிவைத்தார். பின்னர் தன்னுடன் யாத்திரையில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, "கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரையில் 136 நாட்களாக நீங்கள் அளித்துவந்த ஆதரவு, அன்பு, பிரியத்திற்கு நன்றி" என்றார்.

ஹிண்டன்பர்க் அறிக்கை போலியானது - அதானி குழுமம்: அதானி குழுமம் பற்றிய ஹிண்டன்பர்க் அறிக்கை முற்றிலும் போலியானது. அது நிறுவனத்தின் உரிமைப் பங்குகளை குறிவைத்து நடத்தப்பட்ட இழிவான தாக்குதல் என்று அதானி குழு தலைமை நிதி அலுவலர் ஜுகேஷிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

அதானி குழுமத்தின் தலைமை நிதி அலுவலர் ஜுகேஷிந்தர் சிங் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு விரிவான பேட்டி அளித்துள்ளார். அதில், "அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அளித்த அறிக்கை போலியானது. அதானி குழுமத்தின் அடிப்படை தொழில் முறைகளில் எந்த ஒரு தவறையும் அந்த நிறுவனத்தால் சுட்டிக் காட்ட இயலவில்லை. அவர்கள் எங்கள் தொழில்முறைகளை சரியாக அணுகாமல் தவறான தகவல்களைத் தெரிவித்துள்ளனர். ஹிண்டன்பர்க் நிறுவனம் எழுப்பிய கேள்விகளுக்கு 413 பக்கங்களில் நாங்கள் விளக்கமளித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

‘செய்த தவறுகளை தேசியவாதத்தின் பெயரில் குழப்ப முடியாது’: ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அளித்த அறிக்கை போலியானது என்று அதானி குழுமம் கூறியுள்ளதற்கு, "செய்த தவறுகளை தேசியவாதத்தின் பெயரில் குழப்பம் முடியாது. நாங்கள் எழுப்பிய ஒவ்வொரு குற்றச்சாட்டையும் இதுபோன்ற விளக்கங்களால் தவிர்க்க முடியாது” என்று ஹிண்டன்பெர்க் நிறுவனம் பதிலடி கொடுத்துள்ளது. மேலும், “அதானி குழும அறிக்கையை நாங்கள் ஏற்க மறுக்கிறோம். இந்தியா ஒரு வளமான ஜனநாயக நாடு. சூப்பர் பவராக உருவெடுத்து வரும் நாடு. அதற்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.

இந்தியாவின் எதிர்காலத்தை அதானி குழுமம் பின்னோக்கி இழுக்கிறது என நம்புகிறோம். இந்திய தேசியக் கொடியை போர்த்திக்கொண்டு தேசத்தை அந்நிறுவனம் சூறையாடிக் கொண்டிருக்கிறது. மோசடி என்பது மோசடிதான். அதை உலகின் பெரும் பணக்காரர்கள் செய்தாலும், அது மோசடி தான்" என்று தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீன அமைதிப் பேச்சுக்கு போப் வலியுறுத்தல்: ரோமில் நிகழ்வு ஒன்றில் பேசிய போப் பிரான்சிஸ் ,“இஸ்ரேல் தீவிரவாதத் தடுப்பு நடவடிக்கைகளில் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டிருப்பதை அறிந்து நான் கவலை கொள்கிறேன். மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் யூதர்கள் கொல்லப்பட்டதும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. புனித பூமியான ஜெருசலேமிலிருந்து வரும் செய்திகள் என்னை மிகவும் வேதனை அடையச் செய்துள்ளன. எனினும், நாளுக்கு நாள் வளர்ந்து வரும் மரணச் சுழல்கள் இரண்டு நாட்டு மக்களுக்கும் இடையே இருக்கும் சிறிய நம்பிக்கையைக் கொன்றுவிடவில்லை என நம்புகிறேன். இரண்டு நாட்டு அரசுகளும் நேரத்தை வீணடிக்காமல் அமைதி ஏற்பட பேச்சுவார்த்தையில் ஈடுபமாறு கேட்டுக் கொள்கிறேன்”என்று வலியுறுத்தியுள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in