தமிழகத்தில் 87.44 சதவீத மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண்கள் இணைப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு | கோப்புப் படம்
மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் இதுவரை 2.34 கோடி மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம், 500 யூனிட் மானிய விலையில் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். இலவசம், மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6-ம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, நவ.28-ம் தேதி முதல் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர்.

இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக, தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரியை அறிமுகம் செய்தது.

முதலில் டிசம்பர் 31-ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். தமிழகத்தில் தற்போது வரை மின் இணைப்பு எண்ணுடன் 2.34 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில்," முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், நேற்று மாலை வரை 2.34 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இது மொத்தமுள்ள 2.67 கோடி வீடு, குடிசை, கைத்தறி, விசைத்தறி & விவசாய இணைப்புகளில் 87.44% ஆகும். இதுவரை இணைத்திடாதவர்கள் விரைந்து இணைத்திட வேண்டுகிறேன்." இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in