Published : 30 Jan 2023 03:29 PM
Last Updated : 30 Jan 2023 03:29 PM

சென்னையில் "இ டாய்லெட்களை" காணவில்லை: கவுன்சிலர் கேள்வியும், ஆணையர் பதிலும் 

இ டாய் லெட் | கோப்புப் படம்

சென்னை: அதிமுக ஆட்சியின்போது சென்னையில் கட்டப்பட்ட "இ டாய்லெட்களை" காணவில்லை என மாமன்றக் கூட்டத்தில் கணக்குக் குழு தலைவர் தனசேகரன் குற்றஞ்சாட்டினார்.

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது பேசிய கணக்கு குழு தலைவர் தனசேகரன், "கடந்த அதிமுக ஆட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 348 இ டாய்லெட்கள் கட்டுவதற்கு 4 நிறுவனத்திடம் ஒப்பந்தம் வழங்கி பணிகள் நடைபெற்றது. தற்போது அந்த இ டாய்லெட்கள் எங்கேயும் காணவில்லை. கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற நிர்வாக சீர்கேடு மற்றும் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், இ டாய்லெட்கள் சீர்குலைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

கடந்த ஆட்சியில் தூய்மை இந்தியா நிதியை கொள்ளை அடிக்கவே இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இ டாய்லெட்கள் நிலை என்ன என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்து அடுத்த மாமன்றக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீண்டும் ஒப்பந்தங்களின் பங்கேற்காத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்." இவ்வாறு பேசினார்.

இதற்கு விளக்கம் அளித்த மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, "சென்னையில் 2014 ஆண்டு முதல் இ டாய்லெட்கள் 144 இடங்களில் அமைக்கப்பட்டது. தற்போது சிதிலம் அடைந்த நிலையில் உள்ள இ டாய்லெட்களை சீரமைக்க குறிப்பிட்ட அந்த நிறுவனங்களை மீண்டும் அழைத்து சரிசெய்ய அறிவுறுத்தியதால் 37 இடங்களில் சீர் செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி முழுவதும் கழிவறைகள் கட்ட தொடர்ந்து முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

புதிதாக 358 இடங்களில் கழிவறைகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டு வருகிறது. படிப்படியாக, மாநகராட்சி முழுவதும் எல்லா இடங்களிலும் கழிவறைகள் அமைக்கும் திட்டம் உள்ளது. மற்ற மாநகராட்சிகளுக்கு முன்னுதாரணமாக சென்னையில் கழிப்பறைகள் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் பணியாளர்கள் அமர்த்தப்படவுள்ளனர்" இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x