Published : 30 Jan 2023 01:47 PM
Last Updated : 30 Jan 2023 01:47 PM

மலிவான பிரசாரத்தில் ஈடுபடும் ‘கட் அண்ட் பேஸ்ட் அண்ணாமலை’ - திமுக காட்டம்

டி.கே.எஸ்.இளங்ககோவன் மற்றும் அண்ணாமலை

சென்னை: முழு வீடியோவை “கட் அண்ட் பேஸ்ட்” செய்து, மலிவான பிரசாரத்தில் ஈடுபடும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன் அநாகரிக அரசியல் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று திமுக செய்தித் தொடர்புத் தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அறிக்கையில், "பொதுவாக மக்களுக்குப் பயன் தரும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றும்போது இருக்கும் சிக்கல்கள் பற்றித் திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு பேசிய கருத்துகளை வெட்டியும், ஒட்டியும் திரித்து, உண்மைக்குப் புறம்பான கருத்தை வெளியிட்டு அரசியல் அநாகரிகத்தின் உச்சத்திற்கே சென்று அசிங்கமான அரசியல் நடத்தும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் செயலுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இம்மாதம் 27-ம் தேதி மதுரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற திறந்தவெளி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய கழகப் பொருளாளர், சாலை விரிவாக்கப் பணிகளின்போது இயல்பாக ஏற்படும் சில இடர்பாடுகளையும், அவற்றைக் கடந்து மக்கள் நலன் கருதி அத்தகைய திட்டங்களை நிறைவேற்ற வேண்டியதன் அவசியம் பற்றியும் முன்னாள் மத்திய அமைச்சர் என்ற முறையில் சில கடந்த கால நிகழ்வுகளைச் சான்றாகக் கூறிப் பேசியுள்ளார்.

அதில், அவர் மத்திய அமைச்சராக இருந்தபோது அவரது தொகுதியில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக மூன்று கோயில்களை இடிக்க நேர்ந்ததையும், சாலை விரிவாக்கத்திற்காக இடிக்கப்பட்ட அந்தக் கோயில்களுக்குப் பதிலாக, இடிக்கப்பட்டதைவிடப் பெரிய அளவில் மூன்று கோயில்களை மீண்டும், அதுவும் கூடுதல் வசதிகளுடன் அவரே மக்களுக்குக் கட்டிக் கொடுத்தது பற்றியும் சுட்டிக்காட்டி - வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்.

ஆனால், அந்தக் காணொளியில், அவர் மூன்று கோயில்களைத் தவிர்க்க முடியாமல் இடிக்க நேர்ந்தது பற்றிக் கூறியதை மட்டும், வெட்டியும், ஒட்டியும் திரித்தும் தமது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டுள்ள அண்ணாமலை, அதன் தொடர்ச்சியாக அவர் கோயில்களை கட்டிக் கொடுத்துள்ளதாகப் பேசியதைத் திட்டமிட்டே உள்நோக்கத்துடன் “எடிட்” செய்து மறைத்துள்ளார்.

தி.மு.க. பொருளாளர் “சாலை விரிவாக்கப் பணிக்காக இடிக்கப்பட்ட அந்த மூன்று கோயில்களையும், மீண்டும் நூறு, இருநூறு பேர் அமர்ந்து சாப்பிடும் மண்டபம் உள்ளிட்ட வசதியுடன் சிறப்பாகக் கட்டிக் கொடுத்தோம். இதுபோல பல இடங்களில் மதநம்பிக்கை உள்ளவர்களை சமாதானப்படுத்தித் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன்” என்று அந்த உரையில் மிகத் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்துவிட்டு அரைவேக்காட்டு அரசியல் நடத்த வந்த அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் என்ற முறையில் டி.ஆர்.பாலு பேசிய வீடியோவின் முன் பகுதியை மட்டும் வெட்டி வெளியிட்டுள்ளார்.

இன்னும் சொல்லப் போனால், அவர் அந்தக் கூட்டத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம் பற்றிக் குறிப்பிட்ட உரையின் முழுமையான பேச்சு அடங்கிய செய்தியை, “தி பிரின்ட்” இணையதளத்தில் முழுமையாக வெளியிட்டுள்ளனர். ஆனால், அண்ணாமலை பத்திரிகைகளையும் படிப்பதில்லை. அது போன்ற இணையதளங்களில் உள்ள முழுப் பேச்சினையும் படிப்பதில்லை. பாவம் அவருக்குப் படிக்கத் தெரியவும் இல்லை. முழு வீடியோவைப் பார்க்கவும் தெரியவில்லை.

ஆனால், கீழ்த்தரமான அரசியல் செய்வதற்காக ஒரு பேச்சை வெட்டி வெளியிட மட்டுமே தெரிந்திருக்கிறது. இனி அவரை “கட் அண்ட் பேஸ்ட் அண்ணாமலை” என்றே அழைக்க வேண்டும் போலிருக்கிறது. மதவெறி துவேஷத்தைக் கிளப்ப வெட்டி ஒட்டி விஷத்தைக் கக்கியிருக்கும் அண்ணாமலை தமிழ்நாட்டின் பொது அமைதிக்கு உருவாகியிருக்கும் ஒரு கேடு என்பதை இதுபோன்ற தனது அறமற்ற செயல்களால் தினமும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அண்ணாமலையில் பாணியில் நான் கூறுவது என்றால், பிரதமர் நரேந்திர மோடி முதல்வராக இருந்தபோது, 2008 -ம் ஆண்டு குஜராத் மாநிலத் தலைநகர் காந்தி நகரில் சாலைகளை விரிவுபடுத்துவதற்காக 80 கோயில்களை இடித்துத் தள்ளினார்களே, அந்த நடவடிக்கைக்காக இன்றைய பிரதமரும், அன்றைய குஜராத் முதல்வருமா. மோடி இந்துக்களுக்கு விரோதி எனக் கூறினால் அண்ணாமலை ஏற்றுக் கொள்வாரா? ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காகக் கோயில்களை இடிக்கும் பணியை குஜராத்தின் அன்றைய மோடி தலைமையிலான அரசு, ஒரு தீபாவளி தினத்தின் இரவில் தொடங்கியதை அண்ணாமலை அறிவாரா?

“இந்துத்துவாவின் “போஸ்டர் பாய்” என்று மோடியை அழைக்கும் முன்னர், குஜராத் தலைநகர் காந்தி நகரில், ஒரே மாதத்தில் 80 கோயில்களின் ஆக்கிரமிப்பை அவர் அகற்றியதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்ற முகவுரையுடன் ஒரு நாளேடு அப்போது தலைப்புச் செய்தி வெளியிட்டதே, அதுவாவது அண்ணாமலைக்குத் தெரியுமா?

ஓர் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்து, தற்போது ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக ஆகிப் புதிய பரிணாமம் எடுத்திருப்பவருக்கு எந்தச் செய்தியையாவது முழுமையாக அறிந்து புரிந்து கருத்துகளை வெளியிடும் வழக்கம் இருக்கிறதா? ஒன்று அரைகுறையாகப் புரிந்து கொண்டு அபத்தமான கருத்துக்களைத் தெரிவிப்பது. இன்னொன்று வெட்டி ஒட்டி வீடியோ வெளியிடுவது. இதற்கு அண்ணாமலை அரசியல் பேசுவதை விட்டு - ஒரு “கட் அண்ட் பேஸ்ட்” மையத்தைத் துவங்கி முழு நேரப்பணியாக செய்யலாம்.

வளர்ச்சிப் பணிகளுக்காகச் சட்டவிரோதமாகச் சாலைகளை, பொது இடங்களை ஆக்கிரமித்துக் கட்டியிருக்கும் வழிபாட்டுத் தலங்களை அகற்றுவதும், அதற்கு மாற்றாக அருகே கட்டிக் கொடுப்பதும் நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் ஒன்றுதான். அது பா.ஜ.க. ஆளும் மாநிலங்களிலும் இருக்கிறது. நம் நாட்டின் சட்டம் பொது இட ஆக்கிரமிப்பை எத்தகைய கோணத்தில் அணுகுகிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக எத்தனையோ வழக்குகளில் உயர்நீதிமன்றங்களும், உச்சநீதிமன்றங்களும் பல தீர்ப்புகளைச் சொல்லியிருக்கின்றன.

டி.ஆர். பாலு கோயில்களைப் பற்றி கூறிய அதே இடத்தில் ஒரு மசூதி, சர்ச் போன்றவையும் இடம் மாற்றிக் கட்டிக் கொடுக்கப்பட்டன. அது மட்டுமின்றி, அவர் மத்திய அமைச்சராக இருந்த காலத்தில் எந்த இடத்தில் வழிபாட்டுத் தலங்கள் அகற்றப்பட்டாலும், அவை அம்மக்களின் ஒத்துழைப்போடு மீண்டும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த “அரசியல் அரிச்சுவடி” எல்லாம் தெரியாமல் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கும் அண்ணாமலைக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

மற்றபடி தமிழக மக்களின் கனவான சேது சமுத்திரத் திட்டம் போன்ற மாநிலத்தின் வளர்ச்சிக்கான திட்டங்களை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் நோக்கத்துடனும், ஒரு திட்டத்தை நிறைவேற்றுவதில் உள்ள முட்டுக்கட்டைகளை எப்படி சரி செய்வது என்பதையும் உணர்த்தவே அமைச்சர் பொறுப்பில் இருந்தபோது கிடைத்த தனது அனுபவத்தை அந்த மேடையில் முன்னால் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு பேசியிருந்தார். ஆனால், அதையே அண்ணாமலை விஷமத்தனத்துடன் திரித்து வெளியிட்டு, அதன் மூலம் அற்ப மகிழ்ச்சியை அடைந்துள்ளார்.

ஆக்கபூர்வ அரசியல் செய்ய வழியின்றி, இடைத்தேர்தலில் போட்டியிட முடியாமல் திணறி, அ.தி.மு.க.விற்குள் இரு அணிகளை உருவாக்கி மோத விட்டு, அக்கட்சியை பலவீனப்படுத்தித் தங்கள் வேட்பாளரை ஆதரிக்க மிரட்டும் அரசியலை செய்து வரும் பா.ஜ.க. வின் அண்ணாமலைகளின் மூளைகளுக்கு மதவெறிப் பித்துப்பிடித்து வளர்ச்சிக்கு எது தேவை, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ன வேண்டும் என்பது அறியாமல், திக்குத் தெரியாமல் தவித்துக் கொண்டிருப்பது தேசிய கட்சிக்கு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அவமானம் மட்டுமல்ல - மிகப்பெரிய அவலமும் ஆகும்!

“எல்லோருக்கும் எல்லாம்” என்பதே தி.மு. கழகத்தின் கொள்கையும், இலக்கும் என்று எங்கள் கழகத் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்றாடம் முழங்கி வருகிறார். தி.மு.கழகம் அனைத்துத் தரப்பு மக்களின் நலனுக்காகவும், ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காகவும் பாடுபடும் இயக்கம் என்பதை தனது “திராவிட மாடல்” ஆட்சி மூலம் நிறைவேற்றி வருகிறார். அதனை ஒரு பிரிவினருக்கு விரோதியாகச் சித்தரிக்க முயலும் சிறுநரிக் கூட்டத்தின் மலிவான தந்திரம் இது போன்ற “கட் அன்ட் பேஸ்ட்” வீடியோக்கள்!

இத்தகைய நாலாந்தர அரசியல் செய்வோர் மக்கள் மன்றத்தில் ஒருபோதும் ஆதரவைப் பெற முடியாது. எங்கள் முதல்வரின் தலைமையிலான கழக அரசில் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாகச் செயல்படுகிறது. திருக்கோயில் பணிகள் விறுவிறுப்பாக நடக்கிறது. பழனி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு நடந்துவிட்டது. இதையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத அண்ணாமலை இப்படி வெட்டியும், ஒட்டியும், திரித்தும் தரம்தாழ்ந்த செயலில் ஈடுபடுவது மகா கேவலமானது.

தமிழகத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை இழிவுபடுத்தி - மாநிலத்தில் அமைதியைக் கெடுக்கவும் - முன்னேற்றத்தைத் தடுக்கவும் முயற்சி செய்யும் அண்ணாமலை இது போன்ற மலிவான செயல்களை நிறுத்திக் கொள்வது நல்லது என்று தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x