Published : 30 Jan 2023 01:05 PM
Last Updated : 30 Jan 2023 01:05 PM

சம்பா சாகுபடி | இரு வாரங்களுக்கு கூடுதலாக தண்ணீர் திறக்க ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ் | கோப்புப் படம்

சென்னை: சம்பா சாகுபடிக்காக காவிரியில் கூடுதலாக இரு வாரங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டிருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் பல பகுதிகளில் சம்பா நெற்பயிர்கள் கதிர் முற்றியிருக்கும் நிலையில் திடீரென நீர்திறப்பு நிறுத்தப்பட்டிருப்பது காவிரி படுகை உழவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

மேட்டூர் அணை வழக்கத்தை விட நடப்பாண்டில் முன்கூட்டியே திறக்கப்பட்டதும், வழக்கத்தை விட கூடுதலாக 19 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டதும் உண்மை தான். ஆனால், காவிரி படுகையின் பல பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் இன்னும் அறுவடைக்கு தயாராகவில்லை.

குறுவைக்கு பிறகு தாளடி சாகுபடி தாமதமாகவே தொடங்கியது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சம்பா மறு சாகுபடி செய்யப்பட்டது. அதனால், காவிரி பாசன மாவட்டங்களில் 20% பரப்பளவிலான பயிர்களுக்கு இன்னும் அதிக நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது.

தண்ணீர் இல்லாவிட்டால் 2 லட்சம் ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்படும். மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 103.60 அடி தண்ணீர் உள்ள நிலையில், பிப்ரவரி 15-ஆம் தேதி வரை காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விட முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட வேண்டும்" இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x