

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை ஆதீனத்தில் நடைபெற்ற நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை விழாவையொட்டி, திருவாவடுதுறை ஆதீனம் ல அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளி, வீதியுலாவாக செல்லும் பட்டினப் பிரவேசம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
குத்தாலம் வட்டம் திருவாவடுதுறையில் 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இம்மடத்தில் ஆதீன குரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகளின் குருபூஜை விழா மற்றும் பட்டினப் பிரவேச விழா ஆண்டுதோறும் தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
நிகழாண்டு குருபூஜை விழாஜன.19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சைவ சமய நூல்கள் வெளியீடு, திருஞானசம்பந்தருக்கு இறைவன் பொற்கிழி வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து, 10-ம் நாளான நேற்று முன்தினம் இரவு குரு பூஜை விழாவின் முக்கிய நிகழ்வான பட்டினப் பிரவேசம் நடந்தது.
இதையொட்டி, திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசன்னிதானம் ல அம்பலவாண தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், கோமுக்தீஸ்வரர் சுவாமி கோயிலில் தரிசனம் மேற்கொண்டு, நமச்சிவாய மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். தொடர்ந்து, சிறப்பாக சமயப் பணியாற்றிய 10 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அருட்கொடையாக அளித்து, ஆசி வழங்கினார்.
பின்னர், ஆதீன கர்த்தர், ருத்ராட்ச மணிகளால் ஆன தலைவடம் அணிந்து, பவளமணி, கெண்டைமணி, வைர மோதிரங்கள், பட்டு தலைக்குஞ்சம் அலங்காரத்துடன் தங்கப் பாதரட்சை அணிந்து, தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் சிவிகாரோஹணம் செய்தருளினார்.
தொடர்ந்து, மங்கல வாத்தியங்கள் இசைக்க, குதிரைகள் ஆட்டத்துடன், வாணவேடிக்கை முழங்க, ஆதீன கர்த்தர் ல அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அமர்ந்த பல்லக்கை பக்தர்கள் சுமந்து செல்ல ஆதீன மடத்தின் 4 வீதிகளிலும் உலா வந்து பட்டினப் பிரவேசம் சென்ற நிகழ்வு சிறப்பான வகையில் நடைபெற்றது.
வழியெங்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு ஆதீனத்துக்கு பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்து, தீபாராதனை எடுத்து வழிபாடு செய்தனர்.