காரைக்குடி | வீட்டு சுவரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பெரியார் சிலை அகற்றம்: டிஎஸ்பி, வட்டாட்சியர் இடமாற்றம்
காரைக்குடி: காரைக்குடி அருகே வீட்டின் சுற்று ச்சுவரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பெரியார் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் டிஎஸ்பி, வட்டாட்சியர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோட்டையூர் பேரூராட்சி உதயம் நகரில் திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த இளங்கோவன் என்பவர் புதிதாக வீடு கட்டினார்.
அந்த வீட்டின் சுற்றுச் சுவரில் பெரியாரின் மார்பளவு சிலையை நிறுவி இருந்தார். சிலையை நேற்று திறக்க இருந்த நிலையில், அனுமதியின்றி சிலை வைத்ததாகக் கூறி பாஜகவினர் பள்ளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
சிலையை அகற்ற மறுப்பு: இதையடுத்து நேற்று முன்தினம் தேவகோட்டை டிஎஸ்பி கணேஷ்குமார், காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் அனுமதியின்றி சிலை வைத்துள்ளதால், அதை அகற்ற வேண்டுமென இளங்கோவனிடம் தெரிவித்தனர்.
ஆனால், சிலையை அகற்ற இளங்கோவன் மறுத்துவிட்டார். இதையடுத்து அதிகாரிகளே சிலையை அகற்றி காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் வைத்தனர். இந்நிலையில், திடீரென டிஎஸ்பி கணேஷ்குமார், வட்டாட்சியர் கண்ணன் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
ஆட்சியர் விளக்கம்: இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியது: ஜன.27-ம் தேதி திடீரென பெரியார் சிலையை நிறுவி, அதை திராவிட விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஜன.29-ம் தேதி திறக்க நடவடிக்கை எடுத்தனர்.
உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அரசு அனுமதியில்லாமல் தனியார் இடத்தில் சிலைகள் வைக்க கூடாது. இதனால் சிலையை அகற்ற வீட்டின் உரிமையாளரிடம் வலியுறுத்தப்பட்டது.
ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதையடுத்து அந்தசிலை அகற்றப்பட்டு, வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. சிலை வைக்க இளங்கோ அனுமதி கேட்டுவிண்ணப்பித்தால் பரிசீலனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
