

கோவை பெரியநாயக்கன் பாளையம், கஸ்தூரிபாளையம், குப்பிச்சிபாளையம், பாரதிநகர், ஜோதிபுரம் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், பலர் மைக்ரோ பைனான்ஸ் (நுண் கடன்) நிறுவனங்களிடம் நிதி பெற்று தொழில் தொடங்கியுள்ளனர்.
மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் பெண் தொழில் முனைவோருக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக புகார் எழுந் துள்ளது. பெண்கள் கூறும்போது,‘ தவணை காலத்தை நீட்டிக்க வேண்டும் என நுண் கடன் நிறுவனங்களிடம் கேட்டால் மறுக்கிறார்கள்; பணத்தை சரியாக செலுத்தாவிட்டால், தற்கொலை செய்து கொள்ளுங்கள், உங்களது காப்பீட்டுப் பணம் எங்களுக்கு கிடைக்கும் என மிரட்டுகிறார்கள். ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்
வாய்க்கால் சீரமைக்க...
மாவுத்தம்பதி, சின்னாம்பதி விவசாயிகள் தங்கள் மனுவில், ‘வாளையாறு ஆற்றிலிருந்து பிரிந்து வரும் அத்திக்கண்டிவயல் மேல் வாய்க்கால், கீழ் வாய்க்கால்கள் உடைந்து பழுதடைந்துள்ளன. இதனால் விவசாயத்துக்கு கிடைத்து வந்த நீர் வரத்து தடைபட்டுவிட்டது. எனவே பொதுப்பணித்துறை மூலம் வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர். நுகர்வோர் நல சங்கம் அளித்த மனுவில், ‘கோதவாடி குளத்தை நம்பி 50-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகளும், மண்பாண்டத் தொழிலாளர்களும் உள்ளனர். இந்த குளத்தில் அதிகளவில் மண் எடுக்கப்பட்டு விட்டது. இந்நிலையில் கோவை - பொள்ளாச்சி சாலை விரிவாக்கத்துக்கு இக்குளத்தி லிருந்து மண் எடுப்பதற்கு அனுமதி தரக்கூடாது’ என வலியுறுத்தியுள்ளனர்.
விடுதிகளில் முறைகேடு
சமூகநீதிக்கட்சியினர் அளித்த மனுவில், ‘கோவை கிணத்துக்கடவு, சூலூர், சுல்தான்பேட்டை, பொள்ளாச்சி, அன்னூர், கீரணத்தம் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக இரட்டைக்குவளை, சலூன்களில் முடிவெட்ட மறுப்பது, தனி சுடுகாடு போன்ற தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகின்றன. அதேபோல, ஆதிதிராவிட மாணவர்கள் விடுதியில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகமாகக் காட்டி, அரசுப் பணத்தை மோசடி செய்து வருகின்றனர். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கலை ஆசிரியர்கள் சங்கத்தினர் அளித்த மனுவில், ‘வர்தா புயல் நிவாரண நிதியாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களது ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்துகொள்ள அரசாணை வெளியிட வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளனர்,
தொழிலாளர்கள் முற்றுகை
சூலூர் பகுதியில் உள்ள தனியார் செயற்கை வைரம் தயாரிக்கும் ஆலை கிளை நரசிம்மநாயக்கன் பாளையம் கிளைக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால், வேலையைத் தொடர முடியாத சூழல் ஏற்படுவதாகவும், வாழ்வாதாரம் பாதிப்பதாகவும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிஐடியு தொழிற்சங்கம் தலைமை யில், ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சியர் அலுவல கத்தில் நேற்று மனு அளித்தனர். தனியார் நிறுவன விவகாரத்தில் தலையிட முடியாது என அதிகாரிகள் கூறியதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, தொழிலாளர் நலத்துறை பேச்சுவார்த்தைக்கு பிறகு விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.