Published : 01 Jul 2014 12:39 PM
Last Updated : 01 Jul 2014 12:39 PM

விசாரணை என்ற பெயரில் போலீஸ் சித்திரவதை: கரூர் ஆட்சியரிடம் இளம்பெண்கள் புகார் மனு

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பிச்சம்பட்டி காலனியைச் சேர்ந்த இளம்பெண் ஜூன் 23-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கின் விசாரணை என்ற பெயரில் போலீஸார் தினந்தோறும் அழைத்துச் சென்று சித்திரவதை செய்வதாக பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி பிச்சம்பட்டி காலனி யைச் சேர்ந்த இளம்பெண் கொல்லப்பட்ட விவகாரத்தில் 10-க்கும் மேற்பட்டவர்களிடம் போலீஸார் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், கொல்லப்பட்ட பெண்ணுடன் வேலை பார்த்த இளம்பெண்கள், வேலைக்குச் சென்றவர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொல்லப்பட்ட பெண்ணுடன் வேலை பார்த்த 3 இளம்பெண்கள் அவருக்கு உறவுமுறை உள்ளவர்கள். அதேபோல் கொல்லப்பட்ட இளம்பெண்ணின் மாமன் முறை உறவுள்ளவர் அதே ஊரைச்சேர்ந்த நாகராஜன் மகன் ஸ்ரீதரன். இவர் தனியார் கல்லூரியில் 4-ம் ஆண்டு பொறியியல் பட்டம் படித்துவருகிறார்.

ஜூன் 23-ம் தேதி கல்லூரி திறந்ததால் முதல் நாள் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய ஸ்ரீதரன், கரூரில் இருந்து வேலைமுடிந்து வீடு திரும்பிய உறவுமுறை கொண்ட 3 இளம்பெண்களுடன் வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். இதையடுத்து கொலை சம்பவம் நடந்த பிறகு ஸ்ரீதரனை விசாரணைக்கு அழைத்துச்சென்ற போலீஸார் அதன்பின் அவரை விடுவிக்கவில்லை. அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவலையும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் அவரைச் சந்திக்க முடியாமல் உள்ளனர்.

அதேபோல் இளம்பெண்கள் மூவரும் கொல்லப்பட்ட இளம்பெண்ணுடன் வேலை பார்த்தவர்கள் என்பதால் தினமும் விசாரணை என்ற பெயரில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்படுகின்றனர். “கூறியதையே திரும்பத் திரும்ப கூறிவருகிறீர்கள், மாற்றிச்சொல்லுங்கள்” எனக்கூறி போலீஸார் வற்புறுத்துவதாகவும், விசாரணை காரணமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை எனவும் அந்த பெண்கள் கூறுகின்றனர்.

கரூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்த இளம்பெண்களில் இருவர், மற்றொரு பெண்ணின் தாயார் மற்றும் ஸ்ரீதரனின் தந்தை நாகராஜன் ஆகியோர் ஆட்சியர் ச.ஜெயந்தியை சந்தித்து தனித்தனியாக மனு அளித்தனர்.

மனுவில் அவர்கள் கூறியிருப்பது: “கொலை நடந்த நாளிலிருந்து விசாரணை என்ற பெயரில் தினமும் போலீஸார் அழைத்து துன்புறுத்துகிறார்கள். ஜூன் 29-ம் தேதி இரவு 9 மணிக்கு விசாரணைக்கு அழைத்துச் சென்றதுடன் 10.30 மணி வரை விசாரணை என்ற பெயரில் உண்மைக்கு புறம்பான பதில் சொல்லும்படி கூறி சித்திரவதை செய்கின்றனர். ஆகவே, ஆட்சியர் இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காணவேண்டும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம்” எனக் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x