Published : 30 Jan 2023 04:20 AM
Last Updated : 30 Jan 2023 04:20 AM
சேலம்: கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் பட்டியல் இனமாக உள்ளது போல, தமிழகம் முழுவதும் வண்ணார் சமூகத்தை பட்டியலினமாக அறிவிக்க வேண்டும், என்று தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் பேரவையின் மாநில பொதுக்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடைபெற்றது. மாநிலத் தலைவர் பாலு தலைமை வகித்தார். இதில், தமிழகத்தில், கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம், அரசியல் உள்ளிட்டவற்றில் வண்ணார்கள், எண்ணிக்கைக்கு ஏற்ப இட ஒதுக்கீடு பெற முடியாமல், 0.5 சதவீதம் என்ற கணக்கிலேயே இருக்கின்றனர்.
எனவே, தமிழக அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும். தமிழகத்தில் வண்ணார்கள் 25 லட்சத்துக்கும் மேல் இருக்கும் நிலையில், கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் மட்டும் பட்டியல் இனத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். பிற மாவட்டங்களில், மிகவும் பிற்படுத்தப்பட்டோராக இருக்கின்றனர்.
மத்திய அரசின் சட்டப்படி, ஒரு மாநிலத்தில் ஓரிடத்தில் ஒரு இனம் பட்டியலினமாக அங்கீகரிக்கப்பட்டால், அந்தஇனத்தை மாநிலம் முழுவதும்பட்டியல் இனமாக அறிவிக்க லாம். இந்த கோரிக்கை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் 20 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
குறிப்பாக, கோரிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாகக் கூறி, காலதாமதம் செய்து வரு கின்றனர். எனவே, கோரிக்கை மீது விரைவான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பொதுச்செயலாளர் அண்ணாமலை, கவுரவத் தலைவர் தங்கவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT