Published : 30 Jan 2023 04:10 AM
Last Updated : 30 Jan 2023 04:10 AM

மதுவிலக்கு கொள்கையில் திமுக நிலைப்பாடு என்ன? - தருமபுரியில் அன்புமணி கேள்வி

தருமபுரி கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் மணியம்பாடியில் நேற்று நடந்தது. இதில் பாமக மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

தருமபுரி / அரூர்: மதுவிலக்கு கொள்கையில் திமுகவின் நிலைப்பாடு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தருமபுரியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் குடிநீர், வேளாண் பிரச்சினைகளின் நிரந்தரத் தீர்வுக்கு காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் மூலம் வலியுறுத்தி வருகிறோம். “சட்டப்பேரவை தேர்தலின் போது இத்திட்டம் நிறைவேற்றப் படும்” என முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

ஆனால், இத்திட்டத்தைச் செயல்படுத்த ஆர்வம் காட்டவில்லை. காவிரி நீரை சேமித்து வைக்க மேட்டூர் அணையைத் தவிர வேறு அணைகள் இல்லை. இதனால், கடந்தாண்டு 500 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலந்தது. தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்த 3 டிஎம்சி தண்ணீர் போதுமானது.

காவிரி உபரிநீர் திட்டத்தைச் செயல்படுத்தினால் ரூ.4,500 கோடியில் ஒகேனக்கல் குடிநீர் 2-வது திட்டமே தேவையில்லை. மேலும், ஏற்கெனவே முழுமை யாகச் செயல்படுத்தாத ஒகேனக்கல் திட்டத்தின் கீழ் விநியோகம் செய்யப்படும் குடிநீரில், நிலத்தடி நீர் கலக்கிறது. இதேபோல, பஞ்சப்பள்ளி சின்னாற்றில் இருந்து அதிகளவில் தண்ணீர் காவிரியில் கலந்து வருகிறது.

இதனைத் தடுக்க, சின்னாற்றில் இருந்து ஏரிகளுக்கு நீர் செல்லும் கால்வாயைத் தூர்வார அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இக்கால்வாய் தூர்வாரும் பணியை விரைவில் பாமக மேற்கொள்ள உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் கூட சில டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக தெரியவில்லை.

மதுவிலக்கு கொள்கையில் திமுகவின் நிலைப்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்க வேண்டும். கலால் பிரிவில் போதிய போலீஸார் இல்லாததால், போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்து வருவதால், இன்னறய இளைய தலைமுறையினர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இளைஞர்களின் நலன் கருதி, ஆன்-லைன் சூதாட்டத்துக்கு விரைவில் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தொப்பூர் மலைப் பாதையில் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க வரும் மக்களவைக் கூட்டத் தொடரின் போது, தருமபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரனுடன் சென்று தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளோம். மேலும், தருமபுரி-மொரப்பூர் ரயில் பாதைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அறிவுறுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி எம்எல்ஏ, வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்: இதனிடையே, தருமபுரி கிழக்கு மாவட்ட பாமக நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் கடத்தூர் அருகேயுள்ள மணியம்பாடியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் கட்சியினரை தனித்தனியாக சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். தொடர்ந்து அவர்களுடன் புகைப் படமும் எடுத்துக் கொண்டார்.

அப்போது அன்புமணி பேசும்போது, இன்றைய அரசியல் களம் நமக்கு ஏற்றதாக மாறிக் கொண்டுள்ளது. திமுக ஒரு முறை ஆட்சிக்கு வந்தால் திரும்ப வராது. அதிமுக தற்போது நான்காக பிரிந்து குழப்பத்தில் உள்ளது. எனவே, 2 கட்சிகளுக்கும் மாற்றாக அடுத்த தேர்வாக பாமக தான் உள்ளது. வரும் 2026-ல் பாமக ஆட்சிக்கு வரும். இனி யாருடைய தயவும் நமக்கு தேவைப்படாத சூழல் உருவாகியுள்ளது, என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x