

சென்னை: சென்னை மாநகராட்சி சொத்து வரியை கிரெடிட் கார்டு மூலமாக செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் அரையாண்டுக்கு ஒருமுறை சொத்து வரி செலுத்த வேண்டும். உரிய காலகட்டத்தில் செலுத்தினால், 5 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. உரிய காலத்துக்குப் பிறகு செலுத்தும் சொத்து வரிக்கு 2 சதவீத தனி வட்டி விதிக்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் 13 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். சொத்து வரி மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1,400 கோடி வருவாய் கிடைக்கிறது. முந்தையசென்னை மாநகராட்சிப் பகுதிகளில் 24 ஆண்டுகளுக்குப் பிறகும், சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட உள்ளாட்சிப் பகுதிகளில் 14 ஆண்டுகளுக்கு பிறகும், பொது சீராய்வு மூலம் சொத்து வரி விதிக்கப்படுகிறது.
தற்போது 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொத்து வரியை முழுமையாக செலுத்தியுள்ளனர். நீண்ட காலமாக செலுத்தாத நிலுவை வரி ரூ.350 கோடியாக உள்ளது.
இந்நிலையில், சொத்து வரி, நிலுவை வரியை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் வசதியை மாநகராட்சி நிர்வாகம் செயல்படுத்த உள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ``கிரெடிட் கார்டுகளைக் கொண்டு தவணை முறையில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதுபோல, சொத்து வரியையும் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்த இருக்கிறோம். இந்த சேவையை எச்டிஎஃப்சி வங்கி வழங்குகிறது.
இந்த வங்கியின் பணப் பரிவர்த்தனை வழியில் (Payment Gateway), கிரெடிட் கார்டுகளைக் கொண்டு இந்த சேவையைப் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சேவை விரைவில் நடைமுறைக்கு வரும். இதன் மூலம் பலருக்கு சொத்து வரி செலுத்துவது எளிதாகும். இந்த சேவையைப் பெற கிரெடிட் கார்டு வைத்திருப்பது அவசியமாகும்'' என்றனர்.