

சென்னை: திமுகவின் தவறான ஆட்சி செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என பாஜக மாவட்ட செயற்குழு கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
தமிழக பாஜக மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்நேற்று சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமை தாங்கினார். மத்திய சென்னை மேற்கு மாவட்ட தலைவர் தனசேகர், மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சுதாகர் ரெட்டி பேசும்போது, ``நிர்வாகிகள் அனைவரும் வாக்காளர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் தேவைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அனைத்து பகுதிகளிலும் பூத்கமிட்டி அமைத்து, பாஜகவின் திட்டங்களை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டு செல்ல வேண்டும்.
மேலும், மத்திய அரசின் நலத்திட்டங்களையும், புதிய பட்ஜெட் குறித்தும் மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும். அதேபோல், ஆளும் திமுக அரசின் தவறான ஆட்சி மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமான செயல்பாடுகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து மண்டல கமிட்டியின் முக்கியத்துவம் குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் தயார்நிலை குறித்தும் நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தார்.
மத்திய சென்னை கிழக்கு: இதனை தொடர்ந்து நேற்று மாலை மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் திருவல்லிக்கேணியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த், மாநிலஇணைப் பொறுப்பாளர் சுதாகர்ரெட்டி, மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு, கிளை கமிட்டி முழுமைப்படுத்துதல், கட்சி நிதி சேமிப்பு, அமைப்பு ரீதியிலான கருத்துகள், சிறப்பு தீர்மானங்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.