

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில், பயணிகள் வசதிக்காக, 12 புறநகர் ரயில் நிலையங்களில் மொத்தம் 24 மின்தூக்கி அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை போக்குவரத்தின் மையமாக புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து விளங்குகிறது. சென்னையில் தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தங்களில் தினசரி 670 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 9 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மின்சார ரயில்களில் பயணம் செய்து வருகின்றனர்.
புறநகர் ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் பணிகளில் சென்னை கோட்டநிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. ரயில் நிலையங்களில் நகரும்படிக்கட்டு, மின்தூக்கி வசதி, குடிநீர் வசதி என பல வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. அந்த வகையில், 12 புறநகர் ரயில் நிலையங்களில் மொத்தம் 24 மின்தூக்கி வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
இதுகுறித்து சென்னை ரயில்வேகோட்ட அதிகாரிகள் கூறியதாவது: மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் தங்கள் உடைமைகளுடன் நடை மேம்பாலத்தை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இவர்கள் எளிதாக நடைமேடைகளுக்கு செல்லும் விதமாக, மின்தூக்கி வசதி ஏற்படுத்தப்படுகிறது.
அந்த வகையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் ராயபுரம்,பேசின்பாலம், அம்பத்தூர், சென்னை எழும்பூர், கொரட்டூர்,பொன்னேரி, வில்லிவாக்கம், குரோம்பேட்டை, வண்ணாரபேட்டை, திருநின்றவூர், இந்து கல்லூரி, வியாசர்பாடி ஜீவா ஆகிய 12 நிலையங்களில் மொத்தம் 24 மின்தூக்கி வசதி ஏற்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒரு மின்தூக்கி அமைக்க ரூ.45 லட்சம் செலவிடப்படுகிறது.
புறநகர் மின்சார ரயில் நிலையங்களில் முழுவீச்சில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் 3 மாதத்தில் நிறைவடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.